டிசம்பர் 2ல் உண்ணாவிரதம்: எஸ்.பி.வேலுமணி
திமுக அரசைக் கண்டித்து வரும் டிசம்பர் 2ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் ஒரு வாரத்திற்குள் சாலைகள் சீரமைக்கப்படாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 25) கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாலைகளைச் சீரமைக்கக் கோரியும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, கழிவு நீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி, திமுக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்துவது தொடர்பாகக் கோவை இதய தெய்வம் மாளிகையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இதில், சட்டப்பேரவை முன்னாள் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “இந்த மழையால் பொதுமக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்று மின் கட்டண உயர்வு தற்போது மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இதுமட்டுமின்றி சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, திமுக அரசைக் கண்டித்து வரும் டிசம்பர் 2ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைப்பார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் இன்று அனைத்து நிர்வாகிகளை வைத்து கூட்டத்தை நடத்தினோம்.
இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்துக்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. தற்போது எந்த சாலையிலும் செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது.
எப்போது கேட்டாலும் 200 கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் எந்த சாலைகளும் சீரமைக்கப்படவில்லை. எங்கேயும் போகமுடியவில்லை.
கோவையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக எப்படி வெற்றி பெற்றது என தெரியவில்லை.
இன்று மேயர், துணை மேயர் என அனைவரும் திமுகவினராக இருந்தும் கூட எதுவும் செய்யவில்லை.
கொசு மருந்து கூட அடிப்பதில்லை. அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம்.
மக்கள் பிரச்சினைக்காகத்தான் ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். ஆளுநர் எந்த கட்சியையும் சாராதவர். முதலமைச்சர் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
பிரியா
மிஸ் செய்த வில்லியம்சன்.. சதம் கண்ட லதாம் : இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து
ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு: முன்னாள் டிஜிபி ஆஜர்!