ரஷ்யா – உக்ரைன் போரால் தற்போது வரை ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர் 107 நாட்களைத் தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எவ்வளவு முயன்றும், ரஷ்யா அதற்குப் பதிலளிக்காமல் உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தப் போரினால் உக்ரைன் நாட்டு மக்கள் பலர் தங்கள் வாழ்விடங்களை விட்டு பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
உக்ரைனில் போர் தொடங்கியதும் அங்கு வசிக்கும் இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கு மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து, சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை இந்தியா கொண்டு வந்தது.
மத்திய அரசின் இந்த அவசரக் கால நடவடிக்கை மூலமாக உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களில் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்களும் அடங்குவர்.
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவப் படிப்பு மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் போர் இதுவரை முடிவுக்கு வராததால் தங்கள் படிப்பை மீண்டும் எப்போது தொடர்வது என்று தெரியாமல் இந்த மாணவர்கள் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்தியாவிலேயே படிப்பைத் தொடர மத்திய அரசு திட்டமிட்டது.
இந்த நிலையில் உக்ரைனில் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு ரஷ்யா பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய தூதரகத்தின் துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறுகையில், “உக்ரைனில் மருத்துவப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்ற இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகங்களில் அட்மிஷன் வழங்கப்படும்.
மேலும் அவர்கள் தங்கள் முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல் தங்கள் படிப்பைத் தொடர முடியும்” என்று தெரிவித்துள்ளார்.