உலக நாடுகளின் உதவியுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அடக்குமுறை தடுத்து நிறுத்தப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘கோல்டன் குளோப்’ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவின்போது காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆனால் மூன்றாம் உலகப் போர் நடக்காது. இது மூன்று பாகங்கள் கொண்ட தொடர் கிடையாது.
‘கோல்டன் குளோப்’ விருதுகள் வழங்கும் விழாவானது ஒரு சிறப்பான காலகட்டத்தில் தொடங்கியது.
1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது இந்த விழா தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது உலகுக்கே தெரிந்த விஷயமாக இருந்தது.
இப்போது 2023ஆம் ஆண்டு. உக்ரைனில் இன்னமும் போர் ஓயவில்லை. ஆனால், இந்தப் போரின் போக்கு நாளுக்கு நாள் மாற்றம் பெற்று வருகிறது.
உலக நாடுகளின் உதவியுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அடக்குமுறை தடுத்து நிறுத்தப்படும்.
உக்ரைன் சுதந்திரத்துக்காக, ஜனநாயகத்துக்காக நடத்தும் இந்தப் போரில் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார்.
இந்தப் போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, சமையல் எண்ணெய்கள், உணவுப் பொருட்கள் எனப் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பல உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அடக்குமுறை தடுத்து நிறுத்தப்படும் என்று ஜெலன்ஸ்கி பேசியுள்ளது பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
-ராஜ்
ஆளுநர் விவகாரம்: குடியரசுத் தலைவருடன் டி ஆர் பாலு சந்திப்பு!