எங்கள் கோரிக்கையை உக்ரைன் ஏற்றுக்கொண்டால் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் நிபந்தனை விதித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவத்துக்கு உக்ரைன் வீரர்களும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ரஷ்ய படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. இந்தப் போரில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன் இரண்டு நாடுகளிடமும் நல்ல நட்புறவு வைத்திருப்பதால் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பலமுறை புதினையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் துருக்கிக்கு அழைத்து வர முயற்சி செய்துள்ளார். அந்த வகையில், ரஷ்ய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என புதினிடம் எர்டோகன் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த புதின், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்ய பிராந்தியமாக உக்ரைன் ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக எர்டோகனிடம் கூறியிருக்கிறார்.
இந்தத் தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. புதிய பிராந்தியங்கள் தொடர்பான உண்மை நிலையைக் கருத்தில்கொண்டு, உக்ரைன் அதிகாரிகளின் நிபந்தனையின் மீது தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான ரஷ்யாவின் திறந்த நிலைப்பாட்டை புதின் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோனெட்ஸ், லுகான்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை முழுமையான கட்டுப்படுத்தாவிட்டாலும், அவற்றை இணைத்துவிட்டதாக ரஷ்யா கூறுகிறது.
-ராஜ்
மீண்டும் நேருக்கு நேர் மோதலில் இறங்கும் இந்தியா – பாகிஸ்தான்
சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே: நிறைவு பெறுவது எப்போது?
ஒரு ஷவர்மாவால் ரூ.70 ஆயிரம் செலவு செய்த இயக்குநர்!