ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு!

Published On:

| By Kavi

காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் மீதான இடைநீக்கம் நடவடிக்கையை நிறுத்தி வைத்து காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று (நவம்பர் 24) அறிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 15ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் எஸ்.சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.

அதில் வருகிற 24-ஆம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று ரூபி மனோகரன் நேரில் ஆஜராகவில்லை.

விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அவகாசம் கேட்டும், மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தும் ரூபி மனோகரன் கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால் அவர் கடிதத்தில் கூறியிருந்தவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று காலை அறிவித்தது.

இந்த நிலையில் அவர் மீதான இடைநீக்கம் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தினேஷ் குண்டு ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரூபி மனோகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிரானது என்பதால் அவருக்கு எதிரான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரியா

அஜித்துக்காக அய்யப்பனிடம் இப்படி ஒரு வேண்டுதல்!

திருச்சி சூர்யாவை நீக்கிய அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment