காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி, தமிழக காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், நெல்லை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில், நெல்லை மாவட்ட காங்கிரஸாரை சென்னைக்கு அழைத்து வந்தது மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தான் என்று குற்றம்சாட்டிய கே.எஸ்.அழகிரி, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உதவியுடன், ரூபி மனோகரன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றினார்.
அதேபோல், சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள் காங்கிரஸ் தொண்டர்களை கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் ஓடஓட விரட்டித் தாக்கி காயப்படுத்தியதாக,
கே.எஸ்.அழகிரி மீதும் குற்றம்சாட்டியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், அவரை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று, கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி அனுப்பியுள்ள கடிதத்தில்,
”சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து நேரில் ஆஜாராகி விளக்கம் அளிக்க கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடிவடிக்கை குழு உங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில்,
கால அவகாசம் கேட்டும் மற்றும் உங்கள் கருத்துக்களை குறிப்பிட்டும் தாங்கள் அனுப்பிய கடிதத்தை கிடைக்கப்பெற்றோம்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் ஏற்கக்கூடியது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவெடுத்துள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தாங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.
அதுவரை தாங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
கஞ்சாவை எலி தின்னுடுச்சு: காவல்துறையின் பதிலால் ஷாக்கான நீதிமன்றம்!