சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு… ஆனால்! – கண்டிஷன் போட்ட ஆர்.எஸ்.எஸ்

Published On:

| By Selvam

தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம். ஆனால், தேர்தல் பிரச்சாரத்திற்காக அதனை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் சுனில் அம்பேகர் இன்று (செப்டம்பர் 2) தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின் போது சுனில் அம்பேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுனில் அம்பேகர்

“சாதி என்பது இந்து சமுதாயத்தில் மிகவும் சென்சிட்டிவான ஒரு விஷயமாகும். தாழ்த்தப்பட்ட சமூகங்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

அதனால் அரசுக்கு சில நேரங்களில் தரவுகள் (எண்ணிக்கை) தேவைப்படுகிறது. இந்த தரவுகளை இதற்கு முன்பே அரசு எடுத்துள்ளது. தற்போதும் எடுக்க முடியும். ஆனால், இது அந்த சமுகத்தினரின் நலன் கருதி மட்டுமே செய்யப்பட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கருவியாக பயன்படுத்தக்கூடாது” என்றார்.

தொடர்ந்து பாஜகவுக்கும், ஆர்.எஸ்.எஸுக்கும் உள்ள தற்போதைய நிலை குறித்து பேசிய சுனில் அம்பேகர், “எங்களைப் பொறுத்தவரை நாட்டின் நலனே முதன்மையானது. மற்றதெல்லாம் பின்னர் தான். இது குடும்ப விவகாரம். என்ன பிரச்சனை வந்தாலும் எங்களுக்குள்ளாகவே பேசி தீர்த்துக்கொள்வோம். இந்த மூன்று நாள் கூட்டத்தில் பாஜகவை சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளார்கள். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது” என்றார்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் பற்றி கூறுகையில், “மேற்குவங்கத்தில் பயிற்சி மாணவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவாதித்தோம். நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து எங்களின் துணை அமைப்புகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டன.

இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில் சட்டங்களை திருத்தி அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க விசாரணையை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவ வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘வாழை’ படம் பார்த்த ரஜினி எமோஷனல்… மாரி செல்வராஜ் பற்றி சொன்ன அந்த விஷயம்!

21 கேள்விகள்! ட்விஸ்ட் வைத்த போலீஸ் – தள்ளாடும் தவெக மாநாடு… குழப்பத்தில் விஜய்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel