ஆர்.எஸ்.எஸ்.பேரணி: மத்திய அரசுக்கு பயந்த ஐபிஎஸ் அதிகாரிகள்!

Published On:

| By Aara

 சீனியர் அமைச்சரான கே.என்.நேரு கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி திருச்சியில் நடந்த திமுக கூட்டத்தில்,  “தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயந்துகொண்டிருக்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.

இது அரசியல் வட்டாரத்திலும் அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரிதாக பேசப்பட்டது. அமைச்சர் நேரு சொன்னதை ஆர்.எஸ்.எஸ்.பேரணி  விவகாரத்தில் சில போலீஸ் அதிகாரிகள் மெய்ப்பித்திருப்பதாக காவல்துறை வட்டாரங்களிலேயே சொல்கிறார்கள். 

தமிழ்நாட்டில்  இன்று(நவம்பர் 6) மாலை 3 மாவட்டங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கடந்த மாதம் தமிழக போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து அந்த அமைப்பினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 6ஆம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

எனினும் காவல்துறை தங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேற்று முன் தினம்  (நவம்பர் 4)  அனுமதி அளித்தது.

ஆனால் சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும், பங்கேற்பவர்களின் ஆதார் அட்டை ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது போன்ற 11 நிபந்தனைகளை விதித்தது. இதனைதொடர்ந்து இன்று நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை கடலூர்,கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி மற்றும் அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்துகின்றனர்.

இதனால் 3 மாவட்டங்களிலும் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதையொட்டி முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு முன்னதாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் மூலம் தீவிர சோதனை நடைபெற்று வருகின்றது. அது எப்படி மூன்று மாவட்டங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது? போலீஸ் வட்டாரத்திலேயே விசாரித்தோம். 

“பாஜகவின்  நாற்றங்காலான ஆர் எஸ் எஸ் அமைப்பு, தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று  44 இடங்களில் ஊர்வலம் நடத்த தமிழக  காவல்துறையிடம் அனுமதி கேட்டது. 

அதே நாளில் விசிகவினர் தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது காவல்துறையினர் இரு தரப்பினருக்கும் அனுமதியை  மறுத்தனர்.

உடனடியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில்  தமிழக அரசிடம் 31 ஆம் தேதிக்குள் அறிக்கை கேட்ட நீதிமன்றம் நவம்பர் 2ஆம் தேதி தீர்ப்பு சொல்வதாக ஏற்கனவே அறிவித்தது.

இதற்கிடையில் அக்டோபர் 29ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கலாம் என கீழ்மட்ட அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு அனுப்பிவிட்டார் டிஜிபி சைலேந்திரபாபு . மேலிடத்து ஆலோசனைகளுக்கு பிறகு அனுமதி கொடுக்க வேண்டாம் என்று மறு உத்தரவையும் அனுப்பிவிட்டார் டிஜிபி .

உயர் அதிகாரிகள் மத்தியில்  அனுமதி கொடுப்பது சம்பந்தமாகவும் அனுமதி மறுப்பது சம்பந்தமாகவும்  வெவ்வேறு  படிவங்கள் தயார் செய்து ரகசியமாக வைத்திருந்தனர்.

அதில் அனுமதி அளிப்பதற்கான படிவத்தை கடலூர் எஸ். பி. சக்தி கணேசன் எடுத்து கடலூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சண்முக சுந்தரத்தை அக்டோபர் 31ஆம் தேதி அழைத்துள்ளார். 

‘ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கொடுத்துவிடலாம்.  நாளை 1ஆம் தேதி அனுமதி கடிதத்தை ஆபீஸில் வந்து  பெற்றுக் கொள்ளுங்கள்’  என்று சொன்னதோடு அந்த அனுமதிப் படிவத்தில் 31ஆம் தேதியே கையெழுத்தும் போட்டுவிட்டார். 


எஸ்.பி. சக்திகணேசன் போலவே கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன், பெரம்பலூர் எஸ். பி. மணி ஆகிய இருவரும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்துவிட்டனர். மூன்று மாவட்ட எஸ்.பி.க்கள் கொடுத்த அனுமதியை வைத்து நவம்பர் 2ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடந்த  விசாரணையின் போது, ஆர் எஸ் எஸ் வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் அனுமதி கேட்டனர். இந்த சம்பவம்  காவல்துறைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் ஆர்.எஸ்.எஸ்.பேரணியில் எஸ்,பி. சக்தி கணேசன்

இன்று நவம்பர் 6ஆம் தேதி  மாலை நடைபெறும்  ஆர்எஸ்எஸ் பேரணிக்கு பாதுகாப்பு கொடுக்க மூன்று மாவட்டங்களிலும் அதிகாரிகள் தலைமையில் போலீசார் குவிந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திற்கு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் காஞ்சிபுரம் டிஐஜி சத்தியபிரியா மற்றும் எஸ் பி, டிஎஸ்பி , இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊர்வலத்திற்கு தயாராக கடந்த இரண்டு நாட்களாக காக்கி நிற பேன்ட்,  வெள்ளை சட்டைகளை அவசரம் அவசரமாக தைத்து ரெடி செய்தனர் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். 
வணங்காமுடி

சசிகலாவின் மழை நிவாரணம்: தடுத்து நிறுத்திய ஸ்டாலின்

ஆர்.எஸ்.எஸ் பேரணி – பின்வாங்கிய காரணம் இதுதான்: திருமாவளவன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share