ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழகத்தில் வரும் நவம்பர் 6 ஆம் தேதி பேரணி நடத்த அனுமதிக்கும்படி, தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அக்டோபர் 2 ஆம் தேதி தமிழகம் முழுதும் நடத்த இருந்த பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ், அமைப்பின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கில், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு தமிழக காவல்துறைக்கு., ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்கப் பேரணி நடத்த இருப்பதாக அறிவித்தது.
அந்த பேரணிக்கு பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தங்கள் பேரணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 30) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி நிபந்தனைகளை வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும்,
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும், நீதித்துறையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் வாதிட்டார்.
அவர் மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் நடைபெறும் போராட்டங்களை காரணம் காட்டி, நீதிமன்றம் அனுமதி வழங்கிய தங்களது ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கமுடியாது என குற்றம்சாட்டினார்.
கடந்த 2013ல் அம்பேத்கர் பிறந்த நாளன்று பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மனு கொடுத்துவிட்டு, உடனடியாக நீதிமன்றத்தை நாடியபோது, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஊர்வலத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டும், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார் வழக்கறிஞர் பிரபாகரன்.
யாருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்ப மாட்டோம் என உத்தரவாதம் அளித்த பிறகும் காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பதன் அர்த்தம் புரியவில்லை என்றும், மனவலியை ஏற்படுத்துவதாகவும் பிரபாகரன் தெரிவித்தார்.
ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை கூறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஆர்.எஸ்.எஸ். சார்பாக மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலனும் ஆஜராகி, “சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது தான் காவல்துறையின் கடமை என்று பல முறை அறிவுறுத்தியுள்ளார்.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தடையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெறும் கேரளாவிலும், புதுச்சேரியிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது” தெரிவித்தார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலான ஊர்வலத்திற்கு தமிழகத்தில் மட்டும் எவ்வாறு அனுமதி மறுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
அதன்பின்னர் காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜரானார்.
”தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவல்துறை முடிவெடுத்துள்ளது.
குறிப்பாக சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
மத்திய உளவுத்துறையின் அறிக்கைகளை புறந்தள்ளிவிட முடியாது. பொது மக்களின் நலன் தான் உச்சபட்ச முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்ற கருத்திலேயே காவல்துறை செயல்படுகிறது, காந்தி ஜெயந்தி கொண்டாடக்கூடாது என காவல்துறை கூறுவதாக ஆர்.எஸ்.எஸ். தவறாக உருவகப்படுத்துகிறது” என்று வாதாடினார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, “காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் செல்ல மட்டும்தான் அனுமதி மறுக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பில்.
“தற்போதைய சூழலில் அன்றைய தினத்திற்கு பதிலாக மாற்றுத் தேதியில் அனுமதி கோரினால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தடைக்கு பிறகு சென்னை வடக்கு மண்டலத்தில் மட்டும் பாஜகவினருக்கு சொந்தமான 402 வீடுகள், 65 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றன.
என்.ஐ.ஏ. சோதனை, பெட்ரோல் குண்டு வீச்சு ஆகியவற்றிற்கு பிறகு 52000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, தற்போதைய செய்திகள், காவல்துறை விளக்கம், மனுதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அறிவுறுத்தினார்.
அதன்பின்னர் நவம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்தும் படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உத்தரவிட்டதுடன், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
வேந்தன்
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தல் : திமுக அறிவிப்பு!
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு!
ஊர்வலம் நடத்தி மக்கள் சொத்தை சேதப்படுத்தினாலும் இந்த நீதிபதிகள் அவர்களுக்கு கருணை காட்ட தான் செய்வான், சட்டம் ஒர் இருட்டறை அண்ணா சொன்ன மாநிலத்தில் நீதிமன்றம் கூட இருட்டறை தான் இப்போது, எவன் செத்தா இவனுக்கு என்ன, பதவி வெறி தானே தவிர மனித நேயம் கிடையாது