அக்டோபர் 2ம் தேதி, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடக்கும் நாளில்… சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து நடத்தவுள்ளன.
அக்டோபர் 2ம் தேதி, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், ’ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு எதிராக அதே அக்டோபர் 2ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும். இதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்’ என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ’சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி’ என்கிற பெயரில் இந்த அறப்போராட்டத்தை அக்டோபர் 2ம் தேதி நடத்தவுள்ளன.
இதையொட்டி அக்கட்சிகளின் தலைவர்களான கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக இன்று (செப்டம்பர் 26) சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “இந்துவா, இஸ்லாமியா எனப் பாகுபடுத்துவதே ஆர்.எஸ்.எஸ்தான். நாங்கள் எல்லா சமூக மக்களையும் மக்களாகத்தான் பார்க்கிறோம். எங்கெல்லாம் மதக் கலவரங்கள் வருகிறதோ, மதவெறி தலைவிரித்தாடுகிறதோ அங்கு அமைதி சீர்குலைவது மட்டுமல்ல, மாநிலத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. எனவே இதையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறோம்.
இது ஒட்டுமொத்த நலன் சார்ந்த இயக்கமே தவிர, ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ அல்லது சமூகத்துக்கோ ஆதரவானது அல்ல. இந்த இயக்கத்தின் சார்பில் நாங்கள் மூவரும் சென்னையில் கலந்துகொள்ள இருக்கிறோம். இந்த இயக்கம், மதவெறி கூட்டத்திலிருந்து மக்களை காப்பாற்றுகிற ஒரு மகத்தான இயக்கம். சங்பரிவாருக்கு எதிராக நாங்கள் அணி திரண்டிருக்கிறோம். இந்துக்களுக்கு எதிராக அல்ல.
அமைதியைப் பாதுகாப்பதற்காக இந்த பேரியக்கத்தைத் தொடங்கியுள்ளோம். இதுபோன்ற பதற்றத்தை எப்போதும் உருவாக்க வேண்டும்; இதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் செயல்திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் மோதவிட்டு, அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.
2024 தேர்தல் அவர்களது இலக்கு. அதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். மதவெறி பிடித்திருக்கிற பாசிச சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறோம். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஆட்சிமூலம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் இல்லாத இடங்களில் இதுபோன்ற கலவரத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
பாஜக சட்டத்தை மதிக்காது; பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அது ஒரு பாசிச சக்தி. எல்லா விஷயங்களிலும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இன்னும் இதன் தேவையை அதிகப்படுத்தி முழுக்க முழுக்க இந்த சக்திகளின் ஆணிவேரை அறுக்குமளவுக்கு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். சாதாரண இந்துக்களின் மத நம்பிக்கையை நாங்கள் கொச்சைப்படுத்தவில்லை. சாதாரண இந்துக்களின் மத நம்பிக்கையை தங்களின் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ளக்கூடிய சங்பரிவார் இந்துக்களை அடையாளப்படுத்துகிறோம்.
இந்த சங்பரிவார் என்பது சிறு குழு. இவர்களால் சாதாரண இந்துக்கள் பழிவாங்கப்படுகிறார்கள். பலிகடாவாக்கப்படுகிறார்கள் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அவர்களுடைய மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களுக்கு அம்பலப்படுத்தவே இந்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி. இந்த ஆர்.எஸ்.எஸ், அமைப்பு திட்டமிட்டு தமிழகத்தை மதக் கலவர பூமியாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதைக் கண்டித்து அக்டோபர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி என்கிற அறப்போராட்டத்தை நடத்த இருக்கிறோம்” என்றனர்.
ஜெ.பிரகாஷ்
பாஜக கூட்டணி வேண்டாம்: என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி!
ஆர்.எஸ்.எஸ். பேரணி: உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு!