ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய வேண்டுமே தவிர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை தனி நீதிபதி இளந்திரையன் ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (செப்டம்பர் 28 ) திருமாவளவன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையிட்டை கேட்ட நீதிபதிகள், “ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது” என்று தெரிவித்தனர்.
பின்னர், உணவு இடைவேளைக்கு முன் இது குறித்து விளக்கமளித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ”ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்,
அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல் முறையீடு செய்ய முடியும் என்றும்,
சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், அப்படி செய்தால் அது விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் விளக்கமளித்தது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு: மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு!
ஆர்எஸ்எஸ் ஊர்வல நாளில் மனிதச் சங்கிலி: விசிக-கம்யூனிஸ்டு அறிவிப்பு!