முரசொலிக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம்!

Published On:

| By Selvam

முத்துராமலிங்க தேவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை எதிர்த்தார் என்று உண்மைக்கு புறம்பான செய்தியை, முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று ஆர்.எஸ்.எஸ் தென் தமிழ்நாடு மாநில தலைவர் ஆடல் அரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முரசொலியில் நேற்று (அக்டோபர் 14), “வாட்ஸ் அப்பில் வந்தது!” என்ற தலைப்பில், ‘சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நம் உயிர் உள்ள வரை ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் நுழையக் கூடாது. – பசும் பொன் முத்துராமலிங்கம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் முரசொலியை கண்டித்து ஆடல் அரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில்‌ ஆளும்‌ கூட்டணிக்கு தலைமை தாங்கும்‌ திமுகவின்‌ அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி, வாட்ஸ்‌ ஆப்பில்‌ வந்தது என்று சொல்லி, “நம்‌ உயிர்‌ உள்ளவரை தமிழ்நாட்டில்‌ ஆர்‌.எஸ்‌.எஸ்‌., நுழையக்‌ கூடாது” என்று பசும்பொன்‌ முத்துராமலிங்கத்‌ தேவர்‌ அவர்கள்‌ கூறியதாக ஒரு மீம்சை 14/10/2022 அன்று வெளியிட்டுள்ளது.

அந்த தகவல்‌ முற்றிலும்‌ ஆதாரமற்ற பொய்யான தகவல்‌ என்பது மட்டுமின்றி, பசும்பொன்‌ முத்துராமலிங்கத்‌ தேவர்‌ உயிருடன்‌ இருந்தவரை ஆர்‌.எஸ்‌.எஸ்‌. அமைப்புடன்‌ நெருங்கிய உறவு கொண்டிருந்தார்‌. ஆர்‌.எஸ்‌.எஸ்‌., தலைவர்களுடன்‌ நட்பு பாராட்டினார்‌.

ஆர்‌.எஸ்‌.எஸ்‌., இரண்டாவது தலைவர்‌ ஸ்ரீ.குருஜி கோல்வால்கர்‌ அவர்களின்‌ 51வது பிறந்த நாள்‌ விழா 1956-ல்‌ நாடு முழுவதும்‌ விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில்‌ மதுரையில்‌ நடந்த விழாவுக்கு, பசும்பொன்‌ முத்துராமலிங்கத்‌ தேவர்‌ தலைமை வகித்தார்‌. அந்த விழாவில்‌ அவர்‌ பேசுகையில்‌, “தமது கருத்துக்கள்‌ ஆர்‌.எஸ்‌.எஸ்‌. கருத்துக்களோடு இணைந்தே இருந்து வந்திருக்கிறது’ ‘ என்று பேசினார்‌.

உண்மை இப்படி இருக்க, தேச பக்தர்களாலும்‌, தெய்வ பக்தர்களாலும்‌ மதிக்கப்படும்‌ பசும்பொன்‌ முத்துராமலிங்க தேவர்‌, ஆர்‌.எஸ்‌.எஸ்‌. அமைப்பை எதிர்த்தார்‌ என்று சொல்லி, மக்களிடையே ஆர்‌.எஸ்‌.எஸ்‌., குறித்த தவறான, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த திமுகவும்‌, அதன்‌ ஏடான முரசொலியும்‌ முயற்சிப்பது வெட்கக்கேடானது.

ஒரு மாநிலத்தை ஆளும்‌ கட்சியின்‌ அதிகாரப்பூர்வ பத்திரிகை, இதுபோல்‌ ஆதாரமற்ற தகவல்களை எடுத்துப்‌ பகிர்வதும்‌, ஆர்‌.எஸ்‌.எஸ்‌. குறித்து அவதூறு பரப்புவதும்‌ வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்க தேவர் குறித்த முரசொலி மீம்ஸ்க்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

குஜராத் தேர்தல்: தேதி அறிவிக்காததற்கு என்ன காரணம்?

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share