நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் சமூக வலைதளங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக வைக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில் முதன்முறையாக காவி கொடியில் இருந்து மூவர்ண கொடியை தனது டிபியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு வைத்துள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் மூவர்ணக் கொடியை முகப்பு புகைப்படமாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.
இதனையடுத்து பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு கட்சிகள், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் தங்களது டிபியை தேசிய கொடியாக மாற்றி உள்ளனர்.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தேசிய கொடியை டிபியாக மாற்றாதது குறித்து சமூகவலை தளங்களில் சர்ச்சையானது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 3ம் தேதி ”ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த 52 ஆண்டுகளாக ஏன் தேசிய கொடியை ஏற்றவில்லை” எனக் கேள்வியெழுப்பினார்.
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், “நாங்கள் எங்கள் தலைவர் நேரு பிடித்த தேசியக் கொடியை முகப்பாக வைத்துள்ளோம். பிரதமரின் செய்தி அவர்களின் குடும்பத்தினருக்கு கூட சென்று சேரவில்லை என நினைக்கிறேன்.
ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பிரதமரின் பேச்சுக்கு கீழ்படிவார்களா? என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் நிறுவனத் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “ஆர்எஸ்எஸ் சுதந்திர இந்தியாவையும், தேசிய கொடியையும் நிராகரித்துவிட்டது” என கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஆர் எஸ் எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர், ‘ஆர்எஸ்எஸ்-இன் ஒவ்வொரு இழைகளிலும் தேசப்பக்தி நிறைந்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களை அரசியலாக்க கூடாது” என்றனர்.
52 ஆண்டுகளாக தேசிய கொடி ஏற்றவில்லை!
எனினும் பாஜக அரசு ஆட்சியில் வந்ததில் இருந்து இந்தியாவின் மூவர்ண கொடிக்கு பதிலாக, காவி கொடியை தேசிய கொடியாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 52 ஆண்டுகளாக நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்படாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
ஆர்எஸ்எஸ் டிபியில் மூவர்ண கொடி!
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் நேற்று (ஆகஸ்ட் 12) இரவு தனது சமூக வலைதள பக்கத்தில் முகப்பு படத்தினை அதன் பாரம்பரிய காவி கொடியிலிருந்து தேசிய மூவர்ணக் கொடிக்கு மாற்றியுள்ளது.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் துணை செய்தி தொடர்பாளர் நரேந்தர் தாக்கூர் கூறுகையில், ”ஆர்எஸ்எஸ் தனது அனைத்து அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடும். அனைத்து சமூக ஊடகங்களிலும் ஆர்எஸ்எஸ் டிபி காவி கொடியிலிருந்து தேசியக் கொடியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் மத்திய பாஜக அரசின் ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழக சட்டத் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!