என் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ன? ரெய்டுக்குப் பின் வேலுமணி

அரசியல்

”எந்த ஆதாரமும் இல்லாமல் 3-வது முறையாக பழிவாங்கும் நோக்கில் மட்டுமே என் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான எல் இ டி பல்புகள் வாங்கியதில் ரூ. 500 கோடி வரை ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான நிறுவனங்கள் உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 13) சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 9 மணி நேரமாக நடந்த சோதனை நிறைவு பெற்றது.

இதையடுத்து வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். எந்த ஆதாரமும் இல்லாமல் 3 வது முறையாக சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. என் வீட்டில் இருந்து ரூ. 7100 மட்டுமே கைப்பற்றப்பட்டது.

என் அம்மாவின் சிறிய தங்கத்தோடு, சில வெள்ளிப்பொருட்களை தவிர வேறு எதையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றவில்லை.

திமுக அரசு ஊடகத்துக்கு மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்கே ஒரு நெருக்கடியை தருகிறது. என் வழக்கில் உச்ச நீதிமன்றம் இது ஒரு பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்டது என்பதை தெளிவாக புரிந்துகொண்டே உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று கூறி முன்பின் தெரியாதவர்கள் வீடுகளில் எல்லாம் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனபோது இந்த அரசை கவிழ்க்க திமுக முயற்சி செய்தது.

முதலமைச்சர் ஆனபிறகு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருக்கவேண்டும், ஆனால் அதை செய்யாமல் இதுபோன்ற பொய்யான வழக்குகளை போட்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

சோதனை செய்த அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். எங்களிடம் முறைகேடாக எதுவும் இல்லை என்று அதிகாரிகள் எழுதி தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்” என்று எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

கலை.ரா

எஸ்.பி வேலுமணி மீதான ஊழல்: எப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *