கல்லூரிப் பெண்களுக்கு மாதத்தோறும் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த துவக்க விழாவில் பேசிய அவர்,
பாரதி கல்லூரிக்கு ரூ. 25 கோடி
76 ஆண்டுகளை கடந்த பாரதி கல்லூரியில் சில கட்டிடங்கள் பாழடைந்து இருப்பது கவனத்திற்கு வந்தது. 33 வகுப்பறைகள், 7 ஆய்வகம், 2 நூலகம் அடங்கிய ரூ. 25 கோடி மதிப்பிலான 3 அடுக்கு கட்டிடம் கட்ட உத்தரவிட்டுள்ளேன். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வியை அதிகப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி
அரசுப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் மகத்தான திட்டம். கல்வி என்பது ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி கிராமம், நகரம் என்ற வேறுபாடும் மாறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி உருவானது.
சமூக நீதியை உருவாக்கியது நீதிக்கட்சி
உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த பணக்காரர்களும், ஆண்களும் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி இட ஒதுக்கீட்டை உருவாக்கி பள்ளிகளை கட்டியது நீதிக்கட்சிதான். இந்த சமூக நீதியை தொடர்ந்து காப்பாற்றியவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் தான். பெண்களுக்கு சொத்திலே சம உரிமை பெற்றுத்தந்தவர் கலைஞர்.
ரூ. 1000 வழங்குவது கடமை
இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரிக்கனவு, புதுமைப் பெண் ஆகிய திட்டங்கள் திராவிட ஆட்சியின் அடையாளங்கள். கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு இருக்கும் தடையை உடைக்க தான் புதுமைப் பெண் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்று இலவச பேருந்து திட்டத்தால் அரசுக்கு எத்தனைக் கோடி இழப்பு என்பது பெரிதில்லை அதனால் எத்தனை பெண்கள் பயனடைகிறார்கள் என்பது தான் முக்கியம். ரூ. 1000 வழங்குவதை அரசு இலவசம் என்று கருதவில்லை அதை கடமையாக கருதுகிறது.
பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்
அனைவருக்குமான வளர்ச்சியின் உள்ளடக்கம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதே. அதை மனதில் வைத்து தான் புதுமைப்பெண் திட்டமும், தகைசால் பள்ளிகளும், மாதிரிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டது. ரூ. 171 கோடி மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். பள்ளிக் கட்டிடங்கள் நவீன மயமாக்கப்பட்டு, கலை, இலக்கியம், இசை, நடனம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து திறன்களும் வளர்க்கப்படும். இது மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.
பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் கிளாஸ்
அடுத்து வரும் 4 ஆண்டுகளில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். பேராசிரியர் அன்பழகன் பெயரிலான பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 7500 கோடி மதிப்பில் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.
தந்தையாக பார்க்கிறேன்
பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். தகுதியுள்ள வேலையில் சேர்ந்துகொள்ளுங்கள். திருமணத்திற்கு பிறகு வீட்டில் முடங்கிவிடாதீர்கள். தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்கள் தந்தையின் இடத்தில் இருந்து இந்த புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். அதை முறையாக உங்கள் கல்விக்கு பயன்படுத்தி வாழ்க்கையில் உயருங்கள் என்று ஸ்டாலின் பேசினார்.
கலை.ரா