வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டத்தால் வேலுமணி குடும்பம் பயன்பெறும் என்பதால் எடப்பாடி அவதூறாக பேசி வருகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக பிரமுகரின் இல்ல நிகழ்வில் நேற்று (ஆகஸ்ட் 24) கலந்துகொண்ட எடப்பாடி.பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், “கோவை மக்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக ஆட்சியில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், திமுக குடும்பத்துக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் அதிபர், எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்துள்ளார்.
அந்த நிலத்தின் மதிப்பு உயரும் என்பதால் பேருந்து நிலையத்தை இடம்மாற்ற முடிவு செய்துள்ளனர். இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உரிய காலத்தில் நிறைவேற்றியிருந்தால் தற்போது பல ஏரிகளை நிரப்பியிருக்கலாம்.
வறண்ட பகுதிகள் பாசன வசதி பெற்றிருக்கும். ஆனால், பருவகால மழைநீர் கடலில் சென்று கலந்துவருகிறது என அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது தொடர்பாக இன்று (ஆகஸ்டு 25) செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
“கோவையில் ஆச்சரியம் தரும் வகையில் அதிகமானோர் முதலமைச்சருக்கு வரவேற்பு தந்ததை தாங்க முடியாமல்,
பேட்டி என்கிற பெயரில் இல்லாது பொல்லாததை எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேட்டியாக கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த கால கட்டத்தில் அதிமுக கொண்டுவந்த எந்த ஒரு நல்ல திட்டங்களையும் கைவிடவில்லை.
வெள்ளலூர் பேருந்து நிலையத்தை திமுக கிடப்பில் போட்டுவிட்டதாக அவர் சொல்லி இருக்கிறார்.
ஆனால் பொதுமக்களுக்கு உண்மை மறைக்கப்பட்டிருகிறது. அதற்கு பின்னால் பெரும் ரகசியமே இருக்கிறது.
அந்த இடம் பொதுமக்களுக்கு பயன்படகூடிய இடமே அல்ல.. வெள்ளலூர் பேருந்து நிலைய இடம் முழுக்கவே வேலுமணி சொந்தகாரர்களுக்கு சொந்தமானது என சொல்லக்கூடிய அளவில் இருக்கிறது.
அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சொன்னார்களே தவிர அதற்கு எடப்பாடி தரப்பு நிதி ஒதுக்கியதா?
பேருந்து நிலையம் அமைக்க தேவைப்படும் இடம் 61 ஏக்கர் ஆனால் அவர்கள் கையகப்படுத்தியதோ 50 ஏக்கர்.
இதைதவிர கோவை மாவட்ட மக்களும் அந்த இடத்தை விரும்பவில்லை.
பல்லடம் சாலையில் இருந்து அந்த பேருந்து நிலையம் அமைக்கவுள்ள இடத்திற்கு செல்ல வேண்டுமானால் 8 கிமீ சுற்றி செல்ல வேண்டும்..
அதே போல அவினாசி சாலையிலிருந்து இருந்து அந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்திற்கு செல்ல 15 கிமீ சுற்றி செல்ல வேண்டும்..
இதெல்லாம் மக்களுக்கு பயன்பட கூடியது அல்ல..இந்த திட்டத்தால் வேலுமணி குடும்பம் பயன்பெறும் என்பதால் எடப்பாடி பேசி வருகிறார்.
மேலும் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கவுள்ள இடம் திமுகவினருக்கு சொந்தமான இடம் என சொல்லும் எடப்பாடி அதை நீதிமன்றம் சென்று தடுக்கட்டும்.
அவரது குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் ஆட்சியையே கலைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு.
எனவே அதை நாங்கள் சந்திக்க தயார்” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும், “எடப்பாடி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை குறித்தும் பேசி இருக்கிறார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 95% பணிகள் முடிந்து விட்டது.
இன்னும் ரெண்டு மாதங்களில் அது பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதை முதலமைச்சரே பல்வேறு பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.
பல்வேறு மேடைகளில் கோவை மாவட்டத்துக்கு இந்த ஒரு ஆண்டில் என்னென்ன செய்தோம் என்பதை பட்டியலிட்டு சொல்லி இருக்கிறார்” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.