மனித உரிமையை மீறக்கூடிய வகையில் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் வீடுகளில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் சோதனை நடைபெற்று வரும் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் சென்றனர்.
அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு வெளியே அவர்கள் காத்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் பதில் அளிக்க முடியவில்லை.
அதிமுக, பாஜக கூட்டணியில் இரண்டு நாட்களாக குழப்பம் நீடித்து வருகிறது. இதனை திசை திருப்பவே செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் ஊழல் நடந்தது என்று மக்களை நம்பவைக்கும் முயற்சியாக செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
மனித உரிமையை மீறக்கூடிய வகையில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி அமைச்சர் என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனிதர். அவருடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அவரை எங்கள் முன்னால் ஆஜர்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். 10 நிமிடத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்ற அலுவலர்கள் 45 நிமிடங்களாக எந்த பதிலும் அளிக்கவில்லை.
தலைமை செயலகத்தில் ரெய்டு நடத்த வேண்டும் என்றால் தலைமை செயலாளரிடம் அனுமதி வாங்க வேண்டும். அதையும் மீறி ரெய்டு நடந்து வருகிறது.
இன்னும் 10 அமாவாசைகள் தான் பாஜகவிற்கு இருக்கிறது. மற்றொரு அரசு வந்தால் உங்கள் மீது ரெய்டு நடவடிக்கைகள் பாயும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அமலாக்கத்துறை 100 வழக்குகள் போட்டால் அதில் 0.5 சதவிகிதம் மட்டுமே நிரூபித்திருக்கிறார்கள்” என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
செல்வம்
செந்தில் பாலாஜி இல்லத்திற்கு ஆர்.எஸ்.பாரதி வருகை!
அண்ணாமலைக்கு எதிரான தீர்மானத்தில் உள்நோக்கம்: நாராயணன் திருப்பதி