கள்ளச்சாராய மரணத்தை திசை திருப்பி பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக, அதிமுக கோரிக்கை வைக்கிறார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூன் 24) தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் யாரும் எதிர்பாராதது. அனைவரும் வருத்தப்படக்கூடியது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக சொன்னார்.
முந்தைய ஆட்சியாளர்கள் போல திசைதிருப்பாமல், நிகழ்வு நடந்தவுடன் மாவட்ட ஆட்சி தலைவரை மாற்றினார். காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார். இந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் கமிஷனையும், அதேநேரத்தில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிட்டார்.
ஆனால், திட்டமிட்டு இதை அரசியலாக்க வேண்டும் என்பதற்காக தவறான கண்ணோட்டத்தோடு அதிமுக, பாஜக அணுகுகிறார்கள். உண்மையிலேயே இந்த சம்பவத்தில் இவர்களுக்கு அக்கறை இருந்திருக்குமேயானால் அவர்கள் இந்த அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்.
கள்ளச்சாராய சம்பவத்தில் பாஜகவை சேர்ந்தவர்களுக்கும், அதிமுகவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன. முழுமையாக அதை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பாக, இன்றைக்கு எடப்பாடி கள்ளக்குறிச்சியில் அவருடைய ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லாததுபோல பேசியிருக்கிறார்.
2016-ல் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் 570 கோடி கண்டெய்னர் லாரி கைப்பற்றப்பட்டது. இது யாருடைய பணம் என்று திமுக சார்பில் குரல் எழுப்பினோம். நீதிமன்றத்தை நாடினோம். 2017-ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 8 ஆண்டுகள் ஆகிறது. சிபிஐ இன்னும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை.
கள்ளச்சாராய மரணத்தை திசை திருப்பி பிரச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார்கள்.
திமுகவுக்கும் கள்ளச்சாராய மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக நிர்மலா சீதாராமன் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். திமுகவின் மீது பழி சொல்ல வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
பாஜகவை சாந்தவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன. புதுச்சேரியில் இருந்து தான் மெத்தனால் வந்திருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோராதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளச்சாராய மரணம்… ஆளுநரிடம் நாளை புகார்: ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி ஆவேசம்!
கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை: ஆளுநரிடம் பாஜக மனு!