“நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது” – ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சும் விளக்கமும்!

Published On:

| By Selvam

“நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று (ஜூலை 3) பேசியது சர்ச்சையான நிலையில், இன்று (ஜூலை 4) விளக்கமளித்துள்ளார்.

திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நேற்று (ஜூலை 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “குலப்பெருமையால், கோத்திரப்பெருமையால் நாம் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகிவிடவில்லை.

நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு பின்னால் பி.ஏ., எனக் குறிப்பிட்டு போர்டு போட்டுக்கொள்வார்கள்.

இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது” என்று பேசியிருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த  பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது என்று ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையும் ஆர்.எஸ்.பாரதி அவமானப்படுத்தி பேசியிருக்கிறார்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தன்னுடைய பேச்சை திரித்து வெளியிட்டிருப்பதாக ஆர்.எஸ்.பாரதி விளக்கமளித்துள்ளார்..

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில், “சனாதனம் படிக்க விடவில்லை. கோத்திரமும், குலப் பெருமையும் படிக்க வைக்கவில்லை. குறிப்பிட்ட சமூகத்தினர் படிக்கவிடவில்லை. நாங்கள் படித்திருக்கும் படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று தன்னை முன்னிறுத்திப் பேசினார் ஆர்.எஸ்.பாரதி.

வழக்கம் போல் அவருடைய பேச்சைத் திரித்து சர்ச்சையாக்க ஊடகங்கள் முயல்கின்றன. அதில் இன்னொரு வரியைப் பிடித்துக் கொண்டு இப்போது தலைப்பில் போடுகிறார்கள். “இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது” என்று சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

தன்னையொத்த பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் வளர்ச்சியை இப்படிச் சொல்லும் நோக்கம் அவருக்கில்லை என்பதைத் திராவிட இயக்கத்தை உளப்பூர்வமாகப் புரிந்தவர்கள் அறிவார்கள்.

ஆனால், உண்மையிலேயே அவர் சொன்ன செய்தி நடந்த ஒன்று தானே. நாய் டிகிரி வாங்கிய செய்தியை இவர்கள் படித்தார்களா, இல்லையா? கடந்த ஆண்டு ஊடகங்களில் வந்த செய்தி தானே இது. அமெரிக்காவில் ஜஸ்டின் என்ற நாய் டிப்ளோமோ வாங்கியதே. அது ஒரு செய்தி.

இது போல ஏராளமான நிகழ்வுகள் மேற்குலகில் உண்டு. போகிற போக்கில் அதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டிவிட்டுப் போகிறார்.

ஊடகங்கள் அதைப் பிடித்துக் கொண்டு அவர் சொல்ல வந்த ஆதிக்க எதிர்ப்புச் செய்தியை, கோபத்தைப் பின்னுக்குத் தள்ளி திரிக்கின்றன.

அவர் பேச வந்தது கல்வியை இழிவுபடுத்தவா? “ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது.”  என்று நீட் தேர்வையும், இத்தனைக் காலம் நம்மைப் படிக்கவிடாமல் செய்த ஆரியத்தை எதிர்த்துப் பேசுவதைத் திரித்து ஊடகங்கள் வெளியிடுவது அயோக்கியத்தனம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முன்ஜாமீன் கேட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கரூர் நீதிமன்றம் உத்தரவு!

இந்திய அணி வீரர்கள் பேரணி: கட்டுக்கடங்காத கூட்டம்… திக்குமுக்காடிய மும்பை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment