இவிஎம் மெஷின்கள் தயாரிக்கப்படும் இடங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளார்.
முறைகேடு இல்லாமல் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரத்திற்கு நடுவில் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் இணைப்பதை தவிர்க்க வேண்டும் எனக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி,
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக, சென்னை வந்த தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தோம். அதற்கு உரிய பதிலை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் மேன் மேட் மிஸ்டக் (மனித தவறுகள்) மூலமாக இரண்டு சதவிகிதம் எரர் (பிழை) வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தேர்தல் ஆணையமே சொல்கிறது.
உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், 22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2 சதவிகிதம் வரை தவறு நடப்பதற்கு வாய்ப்பிருந்தால், ஏறத்தாழ 46 ஆயிரம் வாக்குகள் செல்லாததாகிவிடும். ஒரு நாடாளுமன்ற தேர்தலில் 46 ஆயிரம் வாக்குகள் என்பது சாதாரண விஷயமில்லை.
1998-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வேணுகோபால், 274 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.
விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியடைந்துள்ள நம் நாட்டில், தேர்தல் ஆணையம் ஏன் இதை இன்னும் நிவர்த்தி செய்யவில்லை. அதனால் தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இவிஎம் மெஷின் மீது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நியாயமான சந்தேகம் வருகிறது. அந்த சந்தேகத்தை போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
இவிஎம் மெஷின்கள் தயாரிக்கப்படும் இடங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதை எல்லாம் நிவர்த்தி செய்வதற்காக தான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம்.
இவிஎம் குறித்து ராகுல் காந்தி முதல் அனைத்து கட்சி தலைவர்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் அனைத்து கட்சி தொண்டர்கள் மத்தியிலும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இது இந்த தேர்தலுக்காக மட்டுமல்ல, இனி வரும் தேர்தல்களும் முறையாக நடைபெற வேண்டுமானால் திமுக தொடர்ந்த வழக்கு வழிகாட்டியது என்ற ஒரு நிலை ஏற்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ கதை இதுதான் ?
வானதி அக்காவா?… அம்மாவா? – பிரஸ் மீட்டில் அண்ணாமலை கலகல!