காமராஜரை பற்றி அவதூறாக பேசிய ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைத்து நாடார் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் மேடையில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
“பெருந்தலைவர் காமராஜர் திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்றார். அவருக்கு கல்லறை கட்டியதே நாம்தான். இன்று வரை அனைவரும் காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையைத் தான் பூஜித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மன்னிக்க வேண்டும், நான் வரலாற்றைத்தான் சொல்கிறேன், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல” எனப் பேசினார்.
இந்த நிலையில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் அனைத்து நாடார் சங்க ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த. பத்மநாபன் நாடார் தலைமையில் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து அனைத்து நாடார் சங்கங்களும் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினார்கள்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், “காமராஜர் குறித்து அவதூறாக பேசிய ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து சென்னையில் நவம்பர் 1ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, அவர் வருத்தம் தெரிவிக்கும் வரையில் காந்திய வழியில் தொடர் அறப்போராட்டங்கள் நடத்துவது” என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-ராஜ்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?: ஓபிஎஸ் தரப்பு கேள்வி!
Comments are closed.