மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 !

அரசியல் தமிழகம்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து இன்னும் சில பகுதி மக்கள் மீளவில்லை.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.  வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண உதவி தொகை நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில்,  “தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று (9-12-2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும்

அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களில் கனமழை!

 

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0