கொரோனா காலத்தில் அப்போது கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா 40,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார். Rs 40000 crore corona scam
அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே எப்போதும் கடும் மோதல் இருக்கும்.
ஆனால் தற்போது பாஜக எம்.எல்.ஏ ஒருவரே, அக்கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விஜயபுரா தொகுதி பாஜக எம்எல்ஏ ஆன பசனகவுடா பாட்டீல் யட்னல் கூறுகையில்,
”கொரோனா காலத்தில் அப்போது கர்நாடகா முதல்வராக இருந்த பிஎஸ் எடியூரப்பா 40,000 கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய ஊழல் செய்துள்ளார். அவர்கள் எனக்கு நோட்டீஸ் கொடுத்து என்னை கட்சியில் இருந்து நீக்க முயற்சித்தாலும், இதை நான் அம்பலப்படுத்துவேன்.
ரூ.45 மதிப்புள்ள முகக்கவசத்தை எடியூரப்பா அரசாங்கம் ரூ.485க்கு விலைக்கு வாங்கியது. பெங்களூருவில் கொரோனா படுக்கைகளுக்கு ஒருநாள் வாடகையாக ரூ.20,000 கொடுக்கப்பட்டது.
ஆனால் அதே விலையில் மெத்தையுடன் கூடிய இரண்டு கட்டில்களை வாங்க முடியும். ஒரு நோயாளியின் மருத்துவ செலவாக ரூ.10 லட்சம் வரை கட்டணம் செலுத்தப்பட்டது.
இப்படி எடியூரப்பா ஆட்சியில் கொரோனா காலத்தில் ரூ.40,000 கோடி வரை ஊழல் அரங்கேறியுள்ளது” என்று பசனகவுடா பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே எடியூரப்பா அரசு கொரோனா சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு என்ற பெயரில் சுமார் 4,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் ஆவணங்களுடன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அதற்கு 10 மடங்காக ஊழல் குற்றச்சாட்டை பசனகவுடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக எம்.எல்.ஏ பசனகவுடாவின் குற்றச்சாட்டு கொரோனா காலத்தில் பெரிய அளவிலான ஊழல் நடந்ததற்கான ஆதாரம். இது காங்கிரஸின் குற்றச்சாட்டை உண்மை என மக்களுக்கு நிரூபித்துள்ளது.
அவர் போகிற போக்கில் குற்றச்சாட்டுகளை கூறுவதை விட்டு, ஊழலை ஒழிப்பதில் உறுதியாக இருந்தால்,
தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். கொரோனா ஊழல் குறித்த அனைத்து ஆதாரத்தையும்
ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தன்னை சௌகிதார் என்று அடிக்கடி பிரகடனம் செய்யும் நாட்டின் பிரதமர் மோடி, சொந்தக் கட்சித் தலைவர் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மௌனம் காப்பது மர்மமாக உள்ளது. இந்த மௌனம், மாநில பாஜக அரசின் ஊழலில் மத்திய தலைவர்களுக்கும் தொடர்புள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது” என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எண்ணூர் அமோனியா கசிவு: தமிழக அரசை எச்சரித்த எடப்பாடி
சென்னை – ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி!
Rs 40000 crore corona scam