அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினியரிங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
சென்னை, கோவை, மதுரையில் 4100 பேர்க்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் 900 கோடிக்கு முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், நேற்று ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 1) செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் உற்பத்தி, புரோட்டான் பரிமாற்ற சவ்வு, எலக்ட்ரோலைசர் அமைப்புகளை உற்பத்தி செய்து வரும் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சான் பிரான்சிஸ்கோவில் மற்றொரு வெற்றிகரமான நாள். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓமியம் நிறுவனம் மூலம் 400 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளோம், 500 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கூகுள் நிறுவனம் முதலீடு செய்தது குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், “2 மில்லியன் இளைஞர்களை அதிநவீன ஏ.ஐ. திறன்களை கொண்டு தயார்படுத்துவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கூகுள் உடனான முயற்சிகளைக் காண எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா