சுமார் ரூ.400 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்த ஆளும் கட்சியின் அமைச்சர் யார் என்பதை ஆதாரத்துடன் இன்று (அக்டோபர் 22) மதியம் 12 மணிக்கு வெளியிட உள்ளதாக அறப்போர் இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு ஊழல் விவகாரங்களை அறப்போர் இயக்கம் தொடர்ந்து ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது. இதன்காரணமாக பல கோடி ஊழல்கள் மக்களிடம் அம்பலப்படுத்தப்பட்டு, வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறப்போர் இயக்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் பெரும் ஊழலில் ஈடுபட்ட அமைச்சரை ஆதாரத்துடன் வெளியிட உள்ளதாக கூறி, அவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தது.
மேலும் “நேரடியா என்ன ஊழல் யார் செய்த மோசடி என்று சொல்லி விடலாம் தான். ஆனால் இந்த ஊழல் பற்றியும் மோசடி அமைச்சர் பற்றியும் அதிகம் மக்களிடம் கொண்டு செல்ல இதை எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த ஊழல் மீது பத்திரிக்கைகளின் கவனத்தை திருப்ப இது போல பல யுக்திகளை கையாள வேண்டி இருக்கிறது.
ஆளுங்கட்சியின் ஊழலை எதிர்க்கட்சியை பேச வைப்பதும், எதிர்க்கட்சி செய்திருந்த ஊழல் மீது ஆளுங்கட்சியை நடவடிக்கை எடுக்க வைப்பதுமே தமிழ்நாட்டில் அத்தனை கடினமான விஷயமாக இருக்கும் போது ஒரு ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டு அதை கையில் இருக்கும் சமூக வலைத்தள ஆதரவுடன் மக்களிடம் கொண்டு செல்ல இன்னும் நாம் கடின முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ’தாவி தாவி அமைச்சர் ஆனவர் அரசு நிலத்தை ஆட்டையை போட்ட சம்பவம்’ என குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் தற்போதைய அமைச்சர் ஒருவர் கிட்டத்தட்ட ரூ 400 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை சூறையாடியுள்ளதை ஆதாரங்களுடன் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிட உள்ளதாக அறப்போர் இயக்கம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து யார் அந்த அமைச்சர் என்ற பெரும் கேள்வி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிகாலை முதல் கனமழை… விடுமுறை அறிவித்த 2 மாவட்ட கலெக்டர்கள்!