கர்நாடக தோல்வியை மறைப்பதற்காகத் தான் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு செய்யப்பட்டு அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. ஆனால் இதில் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 2018-2019 ஆண்டு முதல் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று (மே 19) அறிவித்திருந்தது.
இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்தலாம் என்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக தேர்தல் தோல்வியை மறைப்பதற்காகத்தான் இந்த தந்திரம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,
“500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள். கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
ஒரே நாளில் அதிரடி உயர்வு: தங்க விலை நிலவரம்!