”ரேஷன் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம்”: பெரியகருப்பன்

அரசியல்

2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் ரேஷன் கடைகள் உட்பட பல இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (மே21) விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மே19 ஆம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது.

இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்.

எந்த ஒரு வங்கிக் கிளையிலும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது” என்று தெரிவித்தது.

இதனிடையே, பெரும்பாலன கடைகளில் 2000 நோட்டுகளை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரேஷன் கடைகளிலும் 2000 நோட்டுகளை வாங்க மறுப்பதாக ஆங்காங்கே சில புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், “ரேசன் கடைகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலம் வரை 2,000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம்.

ரேஷன் கடைகளில் மட்டுமல்ல, அனைத்து கடைகளிலும் செப்டம்பர் 30 வரை 2,000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம். 2,000 ரூபாய் நோட்டு பணபரிவர்த்தனையில் அனைத்து வங்கிகளுக்குமான சட்டங்கள் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். கூட்டுறவு வங்கிகளிலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மும்பை-பெங்களூரு: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: மோடி திறக்க ராகுல் எதிர்ப்பு!

ரூ.2000 நோட்டுகள் வாபஸ்: தயாராகும் வங்கிகள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *