ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
90 சட்டப்பேரவைகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று (செப்டம்பர் 18) தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தலைநகர் சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முக்கிய 7 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
அதில் காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் 18 – 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். எல்பிஜி சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும்,
முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள், கணவர்களை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
300 யூனிட் வரை இலவச மின்சாரம்,
கிரீமி லேயரின் வருமான வரம்பை ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும்
விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக 100 சதுர அடி மனைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000, 100 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – அனுஷம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
விசிகவின் அரைநிர்வாணப் போராட்டம்: திமுக அரசுக்குத் தொடரும் குடைச்சல்!