”சிவசேனா சின்னம் ரூ.2,000 கோடி”: இரட்டை இலை என்ன ஆகும்?

Published On:

| By Kavi

இரட்டை இலைச் சின்ன விவகாரம் போல இழுபறியாக நீளாமல், சிவசேனா கட்சியின் சின்ன விவகாரம் சட்டென முடிந்துவிட்டது. ஆனாலும் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு சின்னம் வாங்கப்பட்டுள்ளது என்று உத்தவ் தாக்கரே சிவசேனா அணி வெடியைக் கொளுத்திப்போட்டுள்ளது.

சர்ச்சைக்குப் பேர்போன அந்தக் கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், ஞாயிறன்று ஊடகங்களுக்கு திடீரென பேட்டியளித்தார். அப்போது அவர் வெளியிட்ட அதிரடித் தகவல்தான் இது!

அதாவது, கடந்த 17ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பில், சிவசேனா கட்சியில் போட்டிக் குழுவாக உருவெடுத்த ஏக்நாத் ஷிண்டே அணிக்கே, அந்தக் கட்சியின் பெயரும் சின்னமும் சொந்தம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.

உத்தவ் தாக்கரே அணியினருக்கு மகாராஷ்டிர மாநில இடைத்தேர்தல் முடியும்வரை, எரியும் தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில்தான், உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்சய் ராவத், இரண்டாயிரம் கோடி ரூபாய் டீல் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Rs 2000 Crore Struck to Purchase Shiv Sena Name Poll Symbol

முன்னதாக, ஞாயிறு காலை தன் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவலை ராவத் பதிவுசெய்திருந்தார்.

அதில், கட்சியின் பெயரையும் தேர்தல் சின்னத்தையும் பெறுவதற்கு இரண்டாயிரம் கோடி ஒப்பந்தமும் பரிவர்த்தனையும் நடந்திருக்கிறது என்றும், இது ஆரம்பகட்டத் தகவல்தான்; விரைவில் இன்னும் விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் இந்திய வரலாற்றில் இப்படியொரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்றும் சஞ்சய் ராவத் குறிப்பிட்டிருந்தார்.

பிறகு, ஊடகத்தினரிடம் பேசுகையில்,

சட்டமன்ற உறுப்பினர்களை 50 கோடி ரூபாய்க்கு விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள்;

நாடாளுமன்ற உறுப்பினர்களை 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்;

கவுன்சிலர்களை வாங்க ஒரு கோடி ரூபாய்வரை கொடுத்திருக்கிறார்கள் என்றும்,
இப்படி இருக்கும்போது கட்சியின் சின்னம், பெயரை வாங்குவதற்கு எவ்வளவு பணத்தைக் கொடுத்திருப்பார்கள் என கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் என்றும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

தனக்கு நெருக்கமான கட்டுமானத் தொழிலதிபர் இந்தத் தகவலை தன்னிடம் கூறியதாகவும் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார்.

உத்தவ் தாக்கரே தரப்பிலிருந்து இவ்வளவு பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதும், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் என்ன பதில் கூறுவார்களோ என எல்லா தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்தது.

கட்சி உடைவுக்குப் பின்னர் பல நேரம் அமைதியாக நகர்ந்துவிடும் ஏக்நாத் ஷிண்டே, இதிலும் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டும் இதே கனத்த அமைதியோடுதான், யாரும் எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்து, சொந்தக் கட்சித் தலைவரின் ஆட்சியைக் கவிழ்த்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அணியில் போட்டியிட்ட சிவசேனா, எதிரணியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் திடீர்க் கூட்டு சேர்ந்து ஆட்சியில் அமர்ந்தது. அதில் அமைச்சராக இருந்த ஷிண்டேவுக்கு உத்தவ்தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே வருகையால் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

அதிருப்தி அதிகரிக்க அதிகரிக்க கடந்த ஜூன் மாதத்தில் சிவசேனா கட்சியை உடைத்த கதையெல்லாம் நேயர்களுக்கு நினைவிருக்கும்!

இப்போது, சிவசேனா கட்சியின் பெயரும் சின்னமும் ஷிண்டே தரப்புக்கு அதிகார பூர்வமாகவே வழங்கப்பட்டுவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 20ஆம் தேதியன்று உத்தவ் தாக்கரே தரப்பு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில், 2 ஆயிரம் கோடி டீல் குற்றச்சாட்டு மேலும் ஒரு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஆனால், சஞ்சய் ராவத்தின் இந்தக் குற்றச்சாட்டை, ஏக்நாத் ஷிண்டே அணியின் எம்.எல்.ஏ. சர்வாங்கர் அடியோடு மறுத்துள்ளார். மேலும், இதில் சஞ்சாய் ராவத் என்ன கணக்குப்பிள்ளை வேலை பார்த்தாரா என்றும் அவர் கேட்டுள்ளார்.

விரிவான தகவல்கள் வரும் என்று சொல்லியிருக்கும் ராவத்தான் இதற்கு உரிய பதில் கூறமுடியும் என்கிறநிலையில்,

இரட்டை இலை விவகாரத்தில் என்னதான் நடக்கும் என்பது விதம்விதமான கேள்விகளை எழுப்பிவிட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என இதுவரை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் இரண்டு அணிகளுக்கும் சரிசமமாகவே உத்தரவுகள் வந்துள்ளன.
வழக்கம்போல, இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது தொக்கிநிற்கும் கேள்வியாகவே தொடர்கிறது!.

இர.இரா.தமிழ்க்கனல்

டிஜிட்டல் திண்ணை: சபரீசன் போட்ட சாதி ஸ்கெட்ச்… வேலுமணி வைத்த செக்!

தொடர்ந்து சொதப்பும் கே.எல்.ராகுல்: கடுமையாக விமர்சித்த இந்திய வீரர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share