திருச்சியில் புதிய விமான முனையத்தை திறந்து வைக்க தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி ரூ.19,850 கோடி மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், வைக்கிறார். Prime Minister Modi’s travel plan
புத்தாண்டு பிறந்து முதல் மாநிலமாக தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி இன்று (ஜனவரி 2) வருகை தருகிறார்.
தனி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் 10.30 மணிக்கு திருச்சி -புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
பின்னர் பகல் 12 மணிக்கு மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு திரும்பும் மோடி, 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளாக நவீன அம்சத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
தொடந்து, மதுரை – தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் தொலைவிலான இரட்டை ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ரூ.9,000 கோடி மதிப்பிலான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் 488 கி.மீ நீளமுள்ள இயற்கை எரிவாயு திட்டம்,
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் 697 கிலோ மீட்டர் நீளமுள்ள ‘மல்டி புராடக்ட்’ பெட்ரோலிய குழாய் திட்டம்,
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலை ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் மாணவர்கள் விடுதி, திருச்சி – கல்லகம் மற்றும் கல்லகம் – மீன்சுருட்டி இடையிலான நான்கு வழிச்சாலை திட்டங்கள்,
உள்ளிட்ட மொத்தம் ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பின்னர் பகல் 1.05 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
இந்த விழாக்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை 12 மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஆயிரம் போலீஸார் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஹெல்த் டிப்ஸ் : வீசிங் பிரச்சினைக்கு வீட்டு வைத்தியம்!
தேர்தலில் நிற்கும் தகுதியை இழக்கும் இம்ரான் கான்: காரணம் என்ன?