வருமான வரிக்கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ரூ.1,700 கோடியை அபராதமாக செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு, வருமான வரித்துறை இன்று (மார்ச் 29) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி அதிலிருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.
இதனைத் தொடர்ந்து, ”காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி தேர்தல் செலவுகளை செய்யவிடாமல் வருமான வரித்துறை தடுத்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு நிதி செல்லாமல் தடுத்து நிறுத்தியதும் வருமான வரித்துறையின் செயல்பாடுதான்” என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதற்காக ரூ.1,700 கோடியை வட்டியுடன் அபராதமாக காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில், கடந்த 2017-18 நிதியாண்டில் இருந்து 2021-22 நிதியாண்டு வரை 4 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி சார்பில் வருமான வரி செலுத்தப்படவில்லை. அதன் காரணமாக, வட்டியுடன் ரூ.1,700 கோடியை அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…