பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 : ஸ்டாலினுக்கு ராமதாஸ், முத்தரசன் வலியுறுத்தல்!

Published On:

| By Kavi

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே? தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில் இன்னொரு வேடமா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகையை தமிழக அரசு கடந்த 28ஆம் தேதி அறிவித்தது.

அதில், ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் ரொக்கம் இந்த ஆண்டு அறிவிக்கப்படவில்லை. மழை வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட கூடுதல் நிதி சுமை உள்ளிட்டவை காரணமாக ரொக்கம் வழங்கப்படவில்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருந்தார்.

இந்தநிலையில் தனது எக்ஸ் மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ், “ 2009-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அத்துடன் ரூ.1000 முதல் ரூ.2500 வரை பணமும் சேர்த்து வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.1000 பணம் நிறுத்தப்பட்டதுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், பருப்பு வகைகள், கோதுமை, உப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்பட்டன.

அவை தரம் குறைந்தவையாக இருந்ததாகவும், அவற்றின் கொள்முதலில் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அந்தப் பொருட்களுக்குப் பதிலாக மீண்டும் ரூ. 1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் ரூ.1000 நிறுத்தப்பட்டிருக்கிறது. இது சரியல்ல.

2024-ஆம் ஆண்டில் தேர்தல் வந்ததால் அந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ரூ.1000 பணம் கொடுத்த தமிழக அரசு, 2025ஆம் ஆண்டில் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை என்று தெரிகிறது. 2026-ஆம் ஆண்டு தான் தேர்தல் வரும் என்பதால் அப்போது ரூ.1000 வழங்கி மக்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது மக்களை முட்டாள்களாக்கும் செயல்.

நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது. மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை போராடியோ, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோ பெற வேண்டிய மாநில அரசின் கடமை.

அந்தக் கடமையிலிருந்து தவறியதற்காக மக்களை தமிழக அரசு தண்டிப்பது நியாயமற்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் உதவி வழங்க மறுப்பதும் திமுகவின் இரட்டை வேடம் ஆகும்.

கடந்த சில மாதங்களில் பெய்த கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் பொங்கலை ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதை உணர்ந்து நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காததால், வரும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாது” என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

பாஜக ஒன்றிய அரசு கடந்த 2021 புதிய ஆட்சி அமைந்தது முதல் நிதி ஒதுக்குவதில் பாராபட்சம் காட்டி வருகிறது என்பதுடன் தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது உண்மையாகும்.

இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழ்நாட்டில் நிவாரண பணிகளுக்கும், மக்கள் மறு வாழ்வை உறுதி செய்யவும் 2021 முதல் இதுவரை ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளுக்கு ரூ.82 ஆயிரத்து 458 கோடி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிலையில், ரூ 276 கோடி மட்டுமே வழங்கியிருப்பது எவ்வளவு பெரிய ஏமாற்றம் அளிக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

நடப்பாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு “தமிழ் முதல்வன்” திட்டத்தில் மாதந்தோறும் உதவித் தொகை ரூ.1000ம் அரசு நிதியுதவி செய்து வருகிறது.

இப்படி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு பொங்கல் திருநாளில் பரிசுத் தொகுப்புடன் மட்டுமே நிறுத்திக் கொள்வது ரொக்க தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நிதியமைச்சரின் முடிவின் மீது முதலமைச்சர் தலையிட்டு மறுபரிசீலனை செய்து, பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை குடும்பத்திற்கு தலா ரூ.1000/- வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

ஏய் தோசா… கேலி செய்த போட்டோகிராபர்கள்: நச்சுனு பதிலடி கொடுத்த கீர்த்தி

“யார் அந்த சார்?” : எடப்பாடிக்கு கோவி செழியன் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share