rs 1000 scheme cm mk stalin speech

“ரூ.1000 திட்டம் – சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” : ஸ்டாலின் பேச்சு!

அரசியல்

மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் ஞாயிறு  கிழமைகளிலும் செயல்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000/- வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தொடங்கி வைத்தார்.

அப்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள், காலை உணவுத் திட்டம், பேருந்துகளில் இலவச பயணம் என திமுக திட்டங்களை குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்,
“மகளிர் உரிமை திட்டத்தை அறிவித்தபோது, இதை நிறைவேற்ற முடியாது வெறும் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்கள் என்று சில பேர் அரசியல் ரீதியாக பேசினார்கள்.

நான் அதற்கெல்லாம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. பதில் சொல்லவும் தயாராக இல்லை. பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இவர்களால் தரமுடியாது என்று திட்டமிட்டுச் சொன்னார்கள்.
ஆட்சிக்கு வந்ததும் கொடுத்திருப்போம். ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு என்ன நிலை? நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா என்ற கொடிய நோயில் இந்த நாடு சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.

அப்போது இருந்த நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால்தான், உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முன்வர முடியவில்லை. ஆனால் இன்றைக்கு ஓரளவு நிதி நிலைமையை சரிசெய்து, அதுவும் முழுமையாக அல்ல, ஓரளவு நிலைமையை சரி செய்து, இப்போது செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் வழங்கப் போகிறோம்.

இதனைச் சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்தத் திட்டத்தை எப்படியாவது கொச்சைப்படுத்த வேண்டும். முடக்க வேண்டும், மக்களிடத்தில் ஒரு தவறான பிரச்சாரத்தை திட்டமிட்டு சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதைபற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். இதை அறிவித்துவிட்டால், நிறைவேற்றிக் காட்டுவேன். இது ஸ்டாலினுடைய பணி என்பதை அழுத்தந்திருத்தமாக நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்தான் இந்த முன்னேற்றம்.

ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கப் போகிறது. இது பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை அறவே ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொடுப்பதற்கு இது பயனுள்ளதாக இருக்க போகிறது. பெண்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இது பயனுள்ளதாக இருக்க போகிறது.

கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். இது ஏற்கனவே பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

இந்த விண்ணப்பங்கள் தன்னார்வலர்கள் மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மூலமாக பதிவு செய்யப்படும்.

இந்த விண்ணப்பங்களை வாங்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். விண்ணப்பப் பதிவு காலை 9-30 மணி முதல் மதியம் 1-00 மணி வரையும், பிற்பகல் 2-00 மணி முதல் மாலை 5-00 மணி வரையும் நடைபெறும்.

பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் முகாம்கள் நடைபெறும்.

அந்த இரண்டு நாட்களில் நீங்கள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். குடும்ப அட்டைதாரர்களாகிய உங்கள் ஒவ்வொருக்கும் வழங்கப்படக்கூடிய டோக்கன்களில் நீங்கள் முகாமுக்கு வரவேண்டிய தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த தேதியில் சரியாக வந்து, எவ்வித கூட்ட நெரிசலுமின்றி, நீங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து செல்ல ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

நீங்கள் அளித்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல் குடும்பத் தலைவிக்கு தெரிவிக்கப்படும். செல்போனில் செய்தி வந்துவிடும்.

அரசு விதிமுறைகளின்படி வகுக்கப்பட்ட தகுதிகளையுடைய எந்தவொரு குடும்பமும் இந்த உரிமைத் தொகை பெறுவதிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதில் நம்முடைய அரசு மிக கவனமாக இருக்கிறது.

ஆகவே, எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள். பொய்ப் பிராச்சாரங்கள், பித்தலாட்ட பிரச்சாரங்கள் செய்து கொண்டிருப்பார்கள் அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள்.

முகாமிற்கு வரும் தாய்மார்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், மின்வாரியகட்டண ரசீது ஆகியவற்றை அசலாக சரிபார்ப்பதற்காக கொண்டு வந்து, தகுதியுள்ள அனைவரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும்.

இந்தத் திட்டத்தினை நல்லமுறையில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 35,925 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில், விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக 68,190 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களுக்கு வரும் உங்களை வழி நடத்துவதற்காக, ஒவ்வொரு முகாமிற்கும் ஒரு உதவி மையத் தன்னார்வலர் என்று 35,925 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றுமுதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதிவரை ஞாயிற்றுக் கிழமைகளில் கூட இந்த முகாம்கள் செயல்படும்.

எல்லார்க்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம். அதனால்தான் அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி – அனைத்து சமூக வளர்ச்சி என்பதை நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொடண்டிருக்கிறோம்.

அனைத்து சமூக வளர்ச்சியின் அடையாளம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகும்” என்றார்.

பிரியா

மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

ரிஷப் பண்ட்டுக்கு நன்றி சொன்ன இஷான் கிஷன்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *