புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆகஸ்டு 22) அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், 5 மாதங்களுக்கான ரூ.3 ஆயிரத்து 613 கோடி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணிகள் நடந்து வந்தன.
ஏற்கனவே அறிவித்தபடி புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. ஆனால் ஆளுநர் தமிழிசை உரையுடன், சட்டசபை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததே இதற்கு காரணம். பிரதமர் மோடியை முதல் முறையாக முதல்வர் ரங்கசாமி சந்தித்து நிதி குறித்து வலியுறுத்திய நிலையில், மத்திய அரசின் நிதித்துறை, புதுச்சேரி அரசு கேட்டிருந்த ரூ.11 ஆயிரம் கோடியை சற்று குறைத்து ஒப்புதல் அளித்தது. புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ரூ. 10, 696 கோடிக்கு பட்ஜெட்டுக்கு நிதித்துறை ஒப்புதல் தந்தது.
இதையடுத்து புதுச்சேரி சட்டபேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(ஆகஸ்ட் 22) காலை 9.45 மணிக்கு மீண்டும் கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ. 10696 கோடி பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். புதுச்சேரி நிதி நிலை அறிக்கையை காலை 9.45 மணிக்கு வாசிக்க தொடங்கிய முதல்வர் ரங்கசாமி 11 மணிக்கு முடித்தார்.
அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள் மற்றும் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் வேளையில், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இலவச மனை பட்டா வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்
புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம், காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று ரங்கசாமி அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 802 கோடி ஒதுக்கப்பட்டு அரசுப்பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகள் அமைக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி உதவி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளும் ஒருங்கிணைத்து தொகுப்பு கல்லூரி ஆக மாற்றப்பட உள்ளது என்று கூறிய ரங்கசாமி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலனுக்கென்று தனித்துறை உருவாக்கப்படும். 28 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் லாஸ்பேட்டையில், புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். 52 இளநிலை பொறியாளர்கள் மின்துறையில் விரைவில் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர் என்று பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி தனது பட்ஜெட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. அதை இன்னும் நிறைவேற்றவில்லை என்று தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இதே ஆயிரம் ரூபாயை புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவித்து ஸ்டாலினை இந்த விஷயத்தில் முந்திக் கொண்டிருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. இந்தத் திட்டத்துக்கு தமிழகம் அளவுக்கு புதுச்சேரிக்கு நிதி தேவைப்படாது என்பது குறிப்பிடத் தக்கது.
இதுமட்டுமல்ல இலவசங்களுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலை.ரா
குடும்பத்தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!