ரூ.1000 : மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்!

Published On:

| By Kavi


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் அலுவலரிடம் அதிமுகவினர் புகார் கொடுத்துள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாகவே திமுக சார்பில் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்களும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் கூடாரம், பணம், பரிசு பொருட்கள் விநியோகித்தல், நாம் தமிழர் திமுக இடையே மோதல் என பரபரப்பாகவும், அமைச்சர் பொன்முடி – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரே வீட்டில் வாக்கு சேகரித்தது, பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் பரோட்டா சுட்டுக் கொடுத்தது, டீ போட்டுக்கொடுத்தது என சுவாரஸ்யமாகவும் இருந்தது ஈரோடு தேர்தல் களம்.

இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரச்சாரங்கள் முடிவடைய இன்னும் 3 மணி நேரம் மட்டுமே இருக்கிறது.
இதனால் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காலை முதல், கை சின்னத்தில் போட்டியிடும் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது திமுகவின் முக்கிய வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தசூழலில் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் அலுவலர் சிவகுமாரிடம் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை புகார் கொடுத்துள்ளார்.

அதில், “வருகிற 27ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகைத் தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான உரிமைத் தொகையான ரூ.1000 வரும் மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவித்து வழங்கப்படும் என பிரச்சாரம் செய்து வருவது, அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. முதல்வர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு உறுதிமொழி அளித்துள்ளார். அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக பல அத்துமீறல்களில் ஈடுபட்டது. ஆனால், தற்போது, சட்டத்தை மதிக்க வேண்டிய முதல்வரே அதை மீறியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

பிரியா

4 பிரிவுகளில் சர்வதேச விருதை அள்ளிய ஆர்.ஆர்.ஆர்

உண்மையச் சொல்லுங்க – அமைச்சர்களை வறுத்தெடுத்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel