Who is Paramahansa Acharya

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி: யார் இந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா?

அரசியல் இந்தியா

அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்குவேன் என்றும், தேவைப்பட்டால் கூடுதலாகவும் வழங்குவேன் என்றும் அயோத்தி சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அமைச்சர் உதயநிதி கூறியிருந்த நிலையில், அதற்கு எதிராக இந்து முன்னணி, பாஜகவினர் கொந்தளித்துள்ளனர். அதன் உச்சமாக பரமஹன்ச ஆச்சார்யா இவ்வாறு கூறியிருக்கிறார்.

உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த சாமியார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், வீரத்தமிழர்  பேரவை  அமைப்பின் சார்பில்  பரமஹன்ச ஆச்சார்யா மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சாமியாரின் பேச்சு குறித்து தூத்துக்குடியில் பேசிய அமைச்சர் உதயநிதி, எனது தலையை சீவ எதற்கு 10 கோடி ரூபாய், 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும் என கலைஞர் பாணியில் பதிலளித்தார்.

இந்நிலையில் நேற்று ஊடகத்திடம் பேசியுள்ள பரமஹன்ச ஆச்சார்யா,  முதல்வரின் மகனாக இருந்தாலும் பரவாயில்லை தண்டனை கொடுப்போம்.  உதயநிதி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.  உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் போதாது என்றால் இன்னும் கூடுதலாக அறிவிப்பேன். நானே கூட அவரது தலையை வெட்டுவேன். சனாதன தர்மத்தை அவமானப்படுத்தியதை மட்டும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாட்டில் என்ன வளர்ச்சி ஏற்பட்டாலும், அதற்கு சனாதன தர்மம் தான் காரணம். 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ள உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இப்படி இவர் மிரட்டல் விடுப்பதோ அல்லது  சர்ச்சையிலும் சிக்குவதோ முதன்முறையல்ல,

யார் இவர்?

அயோத்தியில் உள்ள தபஸ்வி சாவ்னி கோயில் சாமியாரான ஆச்சார்யாவின் பெயர் 2021லும் அடிபட்டது.  அப்போது, “இந்தியாவை  இந்து தேசம் என அறிவிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜல சமாதி அடைவேன் என்று கூறி சரயு நதியில் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது உத்தரப் பிரதேச அரசு அவரை ஹவுஸ் அரஸ்ட்டில் வைத்து போலீஸ் பாதுகாப்பு போட்டது.

இதனால் அவர் வீட்டிலேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். 15 நாள் அவர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலையிட்ட பிறகு அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

உதயநிதியை போல் கடந்த ஆண்டு நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் இந்த பரமஹன்ச ஆச்சார்யா.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக காவி நிற உடை அணிந்து நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பரமஹன்ச ஆச்சார்யா ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரிப்பேன் என்று கூறி பதான் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

அதோடு ஷாருக்கானின் புகைப்படத்தை பானையில் ஒட்டி அதை நடுரோட்டில் போட்டுடைத்து பதான் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

சமாஜ் வாதி கட்சியின் மூத்த தலைவர்  சுவாமி பிரசாத் மௌா்யா, தமிழில் ‘ஸ்ரீ துளசி ராமாயணம்’ என்று அறியப்படும் ‘ராமசரிதமானஸ்’ நூலின் சில பகுதிகள் மக்களை சாதியைக் குறிப்பிட்டு அவமதிப்பதாக கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா, மௌா்யாவின் தலையை யாராவது கொண்டு வந்தால் 500 ரூபாய் தருகிறேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

கடந்த மாதம் கூட ஹரியானாவில் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை கிளப்பினார் பமஹம்ச ஆச்சார்யா. நூ மாவட்டத்தில் கலவரம் வெடித்த போது அங்கு 144 தடை விதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நூ மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு ஜலாபிஷேகம் செய்ய சென்ற போது போலீசார் அவரை தடுத்தி நிறுத்தினர்.

இதனால் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆச்சார்யா, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து சென்றார்.

இந்நிலையில் தற்போது உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவரது மிரட்டலைத் தொடர்ந்து உதயநிதிக்கு  கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  வேலூரில் ஆச்சார்யாவின் புகைப்படத்தை எரித்து திமுகவினர்  கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

ஆயுத ஒப்பந்தம்: புதினை சந்திக்கும் கிம் ஜாங் உன்!

வேலைவாய்ப்பு : எஸ்.எஸ்.சி-யில் பணி!

விதிமீறல்: 12,300 பேரின் லைசென்ஸ் முடக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *