பிரபல ரவுடி படப்பை குணா காஞ்சிபுரம் மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா (எ) குணசேகரன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என இவர் மீது சுமார் 48 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் காவல் துறையினர் தீவிரமாக தன்னை தேடி வருவதை அறிந்து கொண்ட படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு சரணடைந்தார். தொடர்ந்து தற்போது படப்பை குணா ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இவரது மனைவி எல்லம்மாள் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணைத் தலைவராகவும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் குணாவும் பாஜகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ்.பாபு வெளியிட்ட அறிக்கையில், “மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் மாநிலச் செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் பி.செல்வம் ஒப்புதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் ஆலோசனைப் படியும், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனைப் படியும் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக குணசேகரன் நியமிக்கப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜக மாநில பட்டியல் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளருக்கு முன் ஜாமீன்!
சனாதன பேச்சு: ஆதாரங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
அக்.23 அஜித் பைக் டூர்… அப்போ விடாமுயற்சி ஷூட்டிங்?