ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தவெக தலைவர் விஜய் பேசியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (நவம்பர் 1) செய்தியாளர்களை சந்தித்தார்.
கிராம தரிசனம்!
அப்போது அவர், ”தமிழ்நாட்டில் காங்கிரசின் கட்டமைப்பை வலுப்படுத்த வருகிற 5 ஆம் தேதி முதல் கிராம கமிட்டிகள் புனரமைப்பு பணிகள் தொடங்கும். இந்த பணிகள் அனைத்தையும் 2 மாதத்திற்குள் முடிப்போம்.
அதன்பின்னர் ’கிராம தரிசனம்’ என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர்கள் கிராமங்களில் தங்க இருக்கிறோம். கிராமங்களில் கட்சி வலிமையாகவும், உயிரோட்டமாக இருந்தால் தான் பிற கட்சிகள் எங்களை தேடி வரும். எனவே கிராமத்தில் கமிட்டிகளை சீரமைப்பதற்காக கிராமங்கள் நோக்கி செல்கிறோம்.
மேலும் வயநாட்டில் பிரியங்கா காந்தியை ஆதரித்து நாளை மறுநாள் வரை தமிழக காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம். இதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள்” என்று பேசினார்.
தை பிறந்தவுடன் வழி பிறக்கும்!
தொடர்ந்து பேசிய அவர், ”தவெக தலைவர் விஜய் அதிகார பகிர்வு பற்றி பேசியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. எங்களை பொறுத்தவரை கூட்டணி முடிவை எடுக்க வேண்டியது அகில இந்திய தலைமை தான். இப்போது நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம்.
தவெக மாநாட்டில் மட்டும் கூட்டம் இல்லை. ராகுல்காந்திக்கும் நாகர்கோவிலில் கொட்டும் மழையிலும் பெரும் கூட்டம் கூடியதை யாரும் மறுக்க முடியாது.
இந்தியா கூட்டணியில் தற்போது எந்த சலனமும், சங்கடமும் இல்லை. நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு மிகவும் லாபகரமாக இருக்கும். தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும்.
தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழி பிறக்கும். அப்போது சொல்ல வேண்டியதை சொல்லுவோம்” என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அமெரிக்க தேர்தல் : கமலா ஹாரிஸுக்கு அவெஞ்சர்ஸ் நடிகர்கள் ஆதரவு!