சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதல் வீதிக்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு இதே நாளில் (செப்டம்பர் 25) பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவர் தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்நிலையில் அவர் இறுதி வரை வசித்து வந்த, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் பகுதிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் அல்லது வீதி என்று பெயர் வைக்கக் கோரி அவர் மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
‘எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும் வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் பார்வைக்குக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்’ என்று தனது மனுவில் சரண் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காம்தார் நகர் முதல் வீதிக்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’இது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி’ : மேயர் பிரியாவின் தபேதார் மாதவி வேதனை!
கல்வி ஆலமரம்: காத்மண்டுவை திரும்பிப்பார்க்க வைத்த இந்திய பேராசிரியர்!