தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருக்குமானால், முதலில் வரும் 2 ஆம் தேதிக்கு முன்பாகவே சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.
இதனையடுத்து சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் அதில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட மறுத்ததாக தகவல் வெளியான நிலையில், சிபிஐஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் ஆளுநருக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று(அக்டோபர் 25) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தனது கல்லூரி படிப்பை இழந்து 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் சங்கரய்யா.
அதன்பின்னரும் சமூக நீதிக்காக, பொருளாதார சமத்துவத்திற்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிற 100 வயதான அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட வேண்டும்.
சுதந்திரப் போராட்டத் தியாகி என். சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆளுகை மன்றமும் தீர்மானம் நிறைவேற்றியது.
பின்னர் ஆட்சி மன்ற குழு பிறப்பித்த உத்தரவை கூட ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்ளாமல் பேசி இருப்பதை பார்த்தாலே உண்மையை புரிந்துகொள்ள முடியும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருக்குமானால், முதலில் 2ஆம் தேதிக்கு முன்பாகவே சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கும் கோப்பில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று பொன்முடி பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், ஓபிஎஸ், விஜயின் தாயார்: நடந்தது என்ன?
அதிகரிக்கும் டெங்கு… 10,000 சிறப்பு முகாம்கள்: மா.சுப்பிரமணியன்