ஆன்லைன் ரம்மி தடை மசோதா: மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர்

அரசியல்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை இரண்டாவது முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 8) திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.

அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் விளக்கம் கேட்ட ஆளுநரை நேரில் சந்தித்து கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தடை மசோதா குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

எனினும் அதன்பிறகு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 4 மாதங்களாக அந்த மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார்.

இதனால் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்தது. சமீபத்தில் கூட சென்னையைச் சேர்ந்த 2 பேர் ஆன்லைன் ரம்மியில் பெரும் தொகையை இழந்ததால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் இன்று திருப்பி அனுப்பியுள்ளார்.

மேலும் மசோதாவில் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உயிர்பலி வாங்கி வரும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி தமிழ்நாட்டின் பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் 4 மாதம் கழித்து இரண்டாவது முறையாக மீண்டும் தடை மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது அரசியல் களத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கொளத்தூரில் பன்னோக்கு மருத்துவமனை : அடிக்கல் நாட்டிய முதல்வர்

அண்ணாமலை பிராஞ்ச் மேனேஜர் தான்…அதிமுக பதில்!

+1
0
+1
1
+1
4
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.