அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிக் கொடுத்த அம்பேத்கர் பெயரையே ஆளுநர் உச்சரிக்கவில்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 9) நடைபெற்றது. கூட்டத்தொடர் தொடங்கியதும் ஆளுநர் உரையை வாசித்தார். உரையை வாசிக்கும் போது சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்தார். இதனால் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “2023 ஆம் ஆண்டு ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரைக்குப் பிறகு நடைபெற்று முடிந்த அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவெடுத்தபடி நாளை (ஜனவரி 10) சட்டப்பேரவை கூட்டம் கூடியதும்,
நம்மை விட்டு மறைந்த திருமகன் ஈவெராவிற்கும் மற்ற தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்ததும் நாளை சட்டப்பேரவை முழுமையாக ஒத்திவைக்கப்படும்.

அதன்பின் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு தினங்களும் சட்டப்பேரவை முழுமையாக நடைபெறும்.
13 ஆம் தேதி முதல்வரின் பதில் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும்” என்றார்.
பிறகு, “ஆளுநர் உரைக்காக அச்சிடப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ள உரையைத் தவிர்த்து வேறு எதையும் பிரசுரிக்க வேண்டாம் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்ற இந்திய அரசியலமைப்பு சட்டமே ஆளுநருக்கு அதிகாரம் கொடுத்துள்ளது.
அந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிக் கொடுத்த அம்பேத்கர் பெயரையே விட்டுவிட்டார். திராவிட மாடல் என்ற வார்த்தையையும் விட்டுவிட்டார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 159 படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் ஆளுநர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் பாதுகாக்க வேண்டியது அவருடைய முழு கடமை. மதச்சார்பற்ற நாடு என்று இருப்பதை மதச்சார்புள்ள நாடு என்று பொதுவெளியில் பேசுகிறார்கள். அது எவ்வளவு பெரிய தவறு?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தமிழ்நாடு என்று தான் இருக்கிறது. அதனைத் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வது தான் நன்றாக இருக்கிறது என்று கூறுவது அவர் வகிக்கின்ற பதவிக்கு நல்லதா என்று தெரியவில்லை. இதை எல்லாம் தவிர்க்க வேண்டும்.
என்ன நோக்கத்திற்காக ஆளுநர் இப்படிச் செய்கிறார் என்று தெரியவில்லை. பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் எதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் படி தான் நாம் நடக்கிறோம். பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியால் எழுதிக் கொடுக்கப்படுகிற உரையைத்தான் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட மாறாமல் அப்படியே வாசிக்கிறார்கள்.
மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அவசரச் சட்டங்களுக்குக் குடியரசு தலைவரிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அடுத்த நிமிடமே ஒப்புதல் வழங்குகிறார்கள்.
அதேபோல் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து அமைச்சரவை ஒப்புதலோடு செல்கின்ற தீர்மானங்களுக்கும் உடனடியாக ஒப்புதல் கொடுக்கிறார்கள்.
ஆனால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இருந்து அமைச்சரவை ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்படுகிற தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் போட்டு விடுகிறார்கள்.
உங்களுக்கே தெரியும் ஆன்லைன் தடை செய்த அவசரச் சட்டத்திற்கு அனுமதி அளித்தார்கள். ஆனால் இதனைச் சட்டமாக இயற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தால் அதற்கு தற்போது வரை எந்த பதிலும் இல்லை.
எதனால் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ஆளுநர் இப்படி நடந்து கொள்வது மனவருத்தமாக இருக்கிறது. ஆளுநராக இருப்பவர்கள் மத்திய அரசை திருப்திப்படுத்தினால் எதாவது உயர் பதவி கிடைக்கும் என்று இவ்வாறெல்லாம் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.
மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு ஏராளமான இடையூறுகளை ஏற்படுத்தி வந்தார். அவர் இப்போது குடியரசு துணைத் தலைவர் பதவி கிடைத்திருக்கிறது.
இதுபோன்ற ஏதாவது ஒரு நோக்கத்தோடு செயல்படுகிறாரா என்று தெரியவில்லை. ஆளுநர் ஆர்.என் ரவி நாளை பீகார் முதலமைச்சராகவோ, துணை குடியரசு தலைவராகவோ ஆவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது. அதற்காகக் கூட இப்படி பேசலாம்.
உச்சநீதிமன்றத்தில் பணிபுரிபவர்களுக்கும் பாஜக பதவி வழங்குகிறது.
ஆளுநர்களுக்கும் வழங்குகிறது. ஜெகதீப் தங்கருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி, நீதியரசர் சதாசிவத்திற்கு கேரளா ஆளுநர் பதவி கிடைத்தது.
எனவே மாநில அரசுகளுக்கு எதிராக நடந்து கொண்டால் மத்திய அரசால் கவுரவிக்க படுகிறார்களா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.
ஆனால் பதவியில் இருந்து கொண்டு இவ்வாறு நடந்து கொள்வது சரியா தவறா என்று அவர்களது மனசாட்சியைத் தான் சொல்லணும். தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து விட்டுச் சென்றிருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பேன். அவர் செய்தது இந்த நாட்டையே அவமதித்தது போலத் தான் இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு கருத்துச் சொல்ல வேண்டும். அதை மீறி கருத்துச் சொன்னால் குற்றம். தமிழ்நாட்டில் ஒரு தொலைநோக்கு பார்வை உள்ளது. சமூகம், சமூக நீதி பார்வை உள்ளது.
மொழிக்கு ஒரு கொள்கை உள்ளது என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தமிழுக்கு தான். தமிழ் 120 நாடுகளிலும், 9 நாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ளது.
அந்த தமிழ் மொழிக்கு விரோதமாக இந்தி திணிப்பு வரும்பொழுது எல்லாம் அதை எதிர் கொள்ளத் தமிழ்நாடு ஒரு போதும் எதிர்கொள்ளத் தயங்கியது கிடையாது. ஆங்கிலம் படித்ததால் தான் இந்த உலகம் முழுவதும் தமிழர்கள் உயர் பதவியில் இருக்கிறார்கள். இதைத்தான் திராவிட மாடல் என்கிறார்கள்.
ஆளுநர் உரைக்குறிப்பில் இல்லாததைப் பேசியதாலே முதலமைச்சர் எழுந்து பேச வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆளுநர் சபை மரபை மீறி இருந்தாலும் ஆளுநர் உரை மீதான விவாதம் பேரவையில் நடைபெறும்” என்று விளக்கினார்.
மேலும் அவர், “தமிழ்நாட்டிற்குப் போட்டியே உலக அளவில் முன்னேறியுள்ள ஜப்பான் போன்ற நாடுகள் தான். தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறுகின்ற தவறுகளுக்கு அரசும் முதலமைச்சர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளுநருக்கு முரண்பட்ட கருத்தைத் தமிழ்நாடு அரசோ, அரசியல் கட்சிகளோ தெரிவிக்கவில்லை. ஆளுநர் தான் முரண்பட்டுப் பேசி வருகிறார். ஆளுநர் பதவியில் இந்த ரவிக்குப் பதிலாகக் கிளியை கொண்டு வந்து கூட நாளை உட்கார வைக்கலாம்.
ஆனால் சட்டப்பேரவை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கியது” என்று பேசினார்.
மோனிஷா
முர்மு தவிர்த்தால் மோடி ஏற்பாரா? ஆளுநரை அகற்றும் போராட்டத்துக்கு அழகிரி அழைப்பு!
மேஜையை உடைத்து ரகளை: ரத்து செய்யப்பட்ட வழக்கறிஞர் தேர்தல்!