தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 26) மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார்.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில், தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து கோவை, சேலம், சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.
தமிழகத்தில் நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் நேற்று (செப்டம்பர் 25) தெரிவித்தார்.
இந்நிலையில், 4 நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்.
டெல்லியில் அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தும், பாஜக பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்கள் குறித்தும் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம், தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
வேலைவாய்ப்பு : சென்னை பல்கலையில் பணி!
இங்கிலாந்து மகாராணி மரணமும், இந்தியாவின் வாரிசு அரசியல் தலைமை பிரச்சினையும்…