நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் வெறும் தபால் காரர்தான் என்றும், நீட்டுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போர் நடத்த வேண்டிய சூழல் உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்று வருகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை, அண்ணா நகரில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் நீட் விலக்கு குறித்து பேசுகையில், “நீட் தேர்வை கொண்டு வரும்போது திமுக கடுமையாக எதிர்த்தது.
எதிர்கட்சியாக இருந்த போது கூட நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வலியுறுத்தினோம்.
நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பியதைக் கூட அதிமுக அப்போது சொல்லவில்லை. நீதிமன்றங்கள் மூலமாக தான் அதை தெரிந்து கொண்டோம்.
இந்த நிலையில் தான் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு மசோதாவை பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு இருமுறை அனுப்பி வைத்துள்ளோம்.
தற்போது மசோதா குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலுக்காக உள்ளது. ஆனால் இதுவரையிலும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
சமீபத்தில் ராஜ்பவனில் நடைபெற்ற கூட்டத்தில் கூட ’நீட் தேர்வு விலக்கிற்கு ஒப்புதல் தர முடியாது. நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணவத்துடன் கூறியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே முழு அதிகாரம் உள்ளது. ஆளுநர் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரிடம் கொண்டு சேர்க்கும் வெறும் தபால் காரர்தான். ஆனாலும் அவர் ஏதோ ஒரு சர்வாதிகாரி போல் பேசி வருகிறார்.
இதன் காரணமாக தான் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து ஆளுங்கட்சியே அறப்போர் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும்வரை திமுக அறப்போராட்டம் தொடரும். சற்றும் ஓயாது. இதே உணர்வு மக்களுக்கும் இருக்க வேண்டும்.
எப்படி 2021ஆம் ஆண்டு திமுகவுக்கு வாக்களித்து தமிழ்நாட்டு விடியல் வாங்கி தந்தீர்களோ, அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தியாவுக்கு நீங்கள் விடியல் பெற்று தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”உதயநிதியால் நீட் தேர்வை ஒழிக்க முடியும்”: துரைமுருகன் நம்பிக்கை!
அடுத்த சூப்பர் ஸ்டார்: சர்ச்சைக்கு சத்யராஜ் வைத்த முற்றுபுள்ளி!