ஆளுநரும் – திமுகவும் மோதிக் கொள்வதில் இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக மாநாட்டிற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று (ஜூன் 8) அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த மாநாடு வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஒரு வெற்றிப்படியாகவும், 2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க கூடிய மாநாடாகவும் அமையும்” என்றார்.

தொடர்ந்து அவரிடம் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அடையாளம் என்று அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “அண்ணாமலைக்கு அவரது கட்சி (பாஜக) பெரியது, எங்களுக்கு எங்களது கட்சி (அதிமுக) பெரியது.
ஆனால் எங்கள் கட்சியை வெல்வதற்கு எவனாலும் முடியாது. இந்தியாவிலேயே ஒரு மாபெரும் கட்டுக்கோப்பான இயக்கம் அதிமுக தான்.
இந்த இயக்கத்தை நம்பி வருபவர்களை நாங்கள் கரைசேர்ப்போம். எல்லோருக்கும் நீச்சல் அடிக்க தெரியும். ஆனால் எப்படிக் கரைசேருவது என்பது அதிமுகவில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்” என்றார்.
தொடர்ந்து, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலி கூத்தாக இருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியின் துணையோடு தான் மது, கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருள் கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது எவ்வளவு பெரிய கேவலம். திராவிட மாடல் என்றாலே கஞ்சா போதை மாடல் தான். ஆளுங்கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஏற்கனவே சொன்னோம். அவ்வாறு செய்தால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா போதை பொருளே இருக்காது என்றோம்.
தமது கட்சிக்காரர்கள் எல்லாம் போதைப் பொருள் விற்று தான் சம்பாதிக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியும்.
அவர்களுக்கு துணை போக வேண்டும் என்று டாஸ்மாக் கடைகளிலே இன்று கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே இந்த ஆட்சியே மக்களால் வெறுக்கப்படுகிற ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் ஆளுநர் – திமுக மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இரண்டு பக்கமும் தவறுகள் இருக்கின்றது.
ஆளுநர் ஒரு மாநிலக் கட்சியின் உறுப்பினர் என்பதை வெளிக்காட்டுகின்ற அளவிற்கு பேசுகிறார். அவர் பேசும் சில அரசியல் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போல் ஆளுநரை ஆளுங்கட்சி விமர்சனம் செய்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இவர்களது மோதலால் தமிழக மக்களின் நல்வாழ்வு தான் பாதிக்கப்படுகிறது. மக்களுக்கான நல்ல திட்டங்களை இன்றைக்குக் கிடப்பில் போடுவதற்கான வாய்ப்பு இருக்கும். இதுபோல இருப்பது ஆளுங்கட்சிக்கும் நல்லது அல்ல. தமிழக மக்களுக்கு நல்லது அல்ல” என்று பேசினார்.
மோனிஷா
யாருக்கு மின் கட்டண உயர்வு? மின்சார வாரியம் அறிவிப்பு!
அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!