குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க ஸ்டாலினை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
தமிழ்நாடு – தமிழகம் சர்ச்சை
இதற்கிடையே தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறுவதும், தமிழ்நாட்டிற்கு தமிழகம் என்ற பெயர் தான் சரியாக இருக்கும் என தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி, தான் வாசித்த உரையில் தமிழ்நாடு, அமைதி பூங்கா, அண்ணா,பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநருக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றி பதிலடி கொடுத்த சம்பவம் வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்தது. இதனால் ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து விருட்டென வெளியேறினார்.

பொங்கல் விழா அழைப்பிதழ் குளறுபடி
அதன் தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டது, தமிழ்நாடு இலச்சினைக்கு பதிலாக இந்திய இலச்சினையை பொறிக்கப்பட்டன. இது தமிழ்நாட்டில் கட்சி சாராத மக்களை கூட ஆளுநருக்கு எதிராக கருத்துகள் கூறவைத்துவிட்டது.
முதல்வர் மு.க ஸ்டாலின் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் ஆளுநரின் பொங்கல் விழாவில் பங்கேற்காமல் விலகினர்.

எச்சரித்த பிரதமர் அலுவலகம்
இப்படி ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடந்து செயலாற்றி வந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்றக்கோரி குடியரசுத்தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுத அதை சட்ட அமைச்சர் ரகுபதியே குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துக் கொடுத்தார்.
இதையடுத்த் டெல்லிக்கு இருமுறை சென்று வந்த ஆர்.என்.ரவியிடம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது.
”பிரதமர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் போற்றி பேசி வருகிறார். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகிறார். ஆனால் நீங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பேசி வருகிறீர்கள். இதனால் பாஜக மீது அவர்களுக்கு வெறுப்பு தான் உண்டாகும். அவர்களின் உணர்ச்சிகளை பாதிக்கும் வகையில் பேச வேண்டாம். தமிழர்களின் உணர்வோடு சென்றுதான் நாம் தமிழ் மக்களை வெல்ல முடியும்” என்று பிரதமர் அலுவலக தரப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி எச்சரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புறக்கணிக்கும் கூட்டணி கட்சிகள்
அதன் எதிரொலியாக தான் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென தமிழையும், தமிழ்நாட்டையும் பாராட்டி பேசியிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
பின்னர் குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆளுநர் விருந்து அழைப்பிதழில், பொங்கலுக்கு செய்த தனது தவறை திருத்தி தமிழ்நாடு, இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார்.

எனினும் ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் வரிசையாக புறக்கணித்துள்ளன. அவர்களை தொடர்ந்து ஆளுநர் விருந்தை திமுக புறக்கணிக்குமா என்ற பலத்த கேள்வி எழுந்தது.
திடீர் தொலைபேசி அழைப்பு
இந்நிலையில் தான் திடீர் திருப்பமாக, குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
எனினும் ஆளுநரின் அழைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநரின் விருந்தை அவர் புறக்கணிப்பாரா? இல்லை ஆளுநரின் அழைப்பை ஏற்று தேநீர் விருந்தில் திமுகவினர் பங்கேற்பார்களா ? என்று கேள்வி எழுந்துள்ளது.
தேனீர் விருந்தை தவிர்த்தாலும் நாளை குடியரசுத் திருநாளில் முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது உறுதி.
கிறிஸ்டோபர் ஜெமா
ஐசிசி தரவரிசை : முதன்முறையாக சாதனை படைத்த முகமது சிராஜ்!
டிஜிட்டல் திண்ணை: வேட்பாளரை டெல்லிக்கு அனுப்பிய அண்ணாமலை- மக்களவைக்கும் கமலை புக் செய்த ஸ்டாலின்