ரூ.215.80 கோடியில் ஆற்றுப்பாலங்கள்: அமைச்சர் எ.வ.வேலு

அரசியல்

தமிழகத்தில் 13 இடங்களில் ஆறுகளின் குறுக்கே பாலம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 10ஆவது நாளான இன்று (ஏப்ரல் 01) நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அப்போது அறிவிப்புகளை வெளியிட்ட துறை அமைச்சர் எ.வ.வேலு,

“நெடுஞ்சாலை துறையின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் மறு ஆய்வு விபரங்களை கணினி மயமாக்குதல் மூலம் எளிதாக கண்காணிக்கப்படும். இதற்காக திட்டப்பணிகள் கண்காணிப்பு மற்றும் தகவல் அமைப்பு என்ற மென்பொருள் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்படும்.

தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, சாலையின் மேடு பள்ளங்கள், இணைய ஆய்வு வாகனம் கொண்டு கண்டறியப்படும். இவ்வாறான தர பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே பணிநிறைவு சான்றிதழ் வழங்கப்படும்.

பாலங்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வண்ணம் ஆய்வுகள் செய்து சிமெண்ட் கலவையின் தரம் மற்றும் வலிமை உறுதி செய்யப்படும்.

நெடுஞ்சாலை துறையின் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் இனிவரும் காலங்களில் தாமதத்தை தவிர்க்கவும் நிலம் எடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகள் உரிய கால கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக நெடுஞ்சாலை துறையின் 12,291 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலைகளில் நில எல்லை அளவு மற்றும் மரங்கள், சாலை உபகரணங்கள் உள்ளிட்ட சொத்துகளின் விவரங்கள் கணினி மயமாக்கப்படும்.

கலைஞரின் நூற்றாண்டை ஒட்டி மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். பசுமையான சாலைகள் மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குவது இத்துறையின் குறிக்கோளாகும்.

சாலை ஓரங்களில் உள்ள உயரமான பகுதிகளில் மண் அரிப்பை தவிர்க்கும் பொருட்டு பனை விதைகள் ஊன்றப்படும்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 13.30 கிலோமீட்டர் நீள ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை உள்ளிட்ட 200 கிலோமீட்டர் சாலைகள் நான்கு வழித்தடமாகவும் 600 கிலோ மீட்டர் சாலைகள் இருவழித்தடமாகவும் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.

அதுபோன்று மாவட்ட தலைமை இடங்கள் மற்றும் தாலுகா தலைமை இடங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகள் அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கிலோமீட்டர் 4 வழித்தட சாலைகளாகவும் மற்றும் 6,700 கிலோமீட்டர் இரண்டு வழி தடசாலைகளாகவும் அகலப்படுத்தப்படும்.

ஆற்றுப்பாலங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நெரும்பூர் அருகில் பாலாற்றின் குறுக்கே,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி அருகில் கல்லாற்றின் குறுக்கே,

கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் அருகில் வெள்ளாற்றின் குறுக்கே,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகில் கமண்டல நாக நதி குறுக்கே,

வடஇலுப்பை அருகில் பாலாற்றின் குறுக்கே,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூரண்டம்பாளையம் ஓடை குறுக்கே,

செஞ்சேரிமலை அருகில் ஆழியாற்றின் குறுக்கே,

பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்பெரம்பலூர் அருகில் சின்னாற்றின் குறுக்கே,

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூக்கொல்லை அருகில் பூனைக்குத்தி ஆற்றின் குறுக்கே,

பெரியகோட்டை அருகில் கண்ணனாற்றின் குறுக்கே,

ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்னிவயல் அருகே வைகை ஆற்றின் குறுக்கே,

நாமக்கல் மாவட்டத்தில் இலுப்பை அருகே திருமணிமுத்தாற்றின் குறுக்கே என 9 மாவட்டங்களில் 13 இடங்களில் 215.80 கோடி ரூபாய் மதிப்பில் ஆற்றுப்பாலங்கள் அமைக்கப்படும்.

நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே,

திருச்சி மாவட்டம் இடையாத்துமங்கலம் அருகில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகில் கோவம் ஆற்றின் குறுக்கே ஆகிய மூன்று இடங்களில் ஆற்றுப்பாலங்கள் அமைக்க 29.65 கோடி மதிப்பில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெய்யாடிவாக்கம் – இளையனார் வேலூர் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே மற்றும் வாலாஜாபாத் – அவலூர் சாலையில் திருப்புலிவலம் ஆற்றின் குறுக்கே ஆகிய இரண்டு ஆற்றுப் பாலங்கள் கட்ட முதல் கட்டமாக 50 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்” என்று அறிவித்தார் அமைச்சர் எ.வ.வேலு.

பிரியா

24 மணி நேரத்தில் சாலை பள்ளங்கள் சீரமைப்பு: அமைச்சர் எ.வ.வேலு

திருடுபோன 265 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

River bridges at Rs.215.80 crore
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *