குஜராத் சட்டசபை தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதனால் அவரை எதிர்த்து அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரவீந்திர ஜடேஜாவின் சகோதரியை களமிறக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் ரவீந்திர ஜடேஜா யார் பக்கம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவின் உயர்மட்ட தேர்தல் குழு நேற்று (நவம்பர் 9 ) மாலை பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசித்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றனர். இதையடுத்து, குஜராத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (நவம்பர் 10 )வெளியிடப்பட்டது.
ஜடேஜாவின் மனைவி
இதில் ஜாம்நகர் வடக்குத் தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா போட்டியிடுவதால், அவரை எதிர்த்து பலம்வாய்ந்த ஒருவரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நயினாவை களமிறக்க காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகிறது. அதாவது நயினா ஜாம்நகர் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர், 2019 ல் பாஜகவில் ஜடேஜா மனைவி ரிவாபா சேர்ந்த பிறகே காங்கிரஸில் இணைந்தார்.
ஆக்டிவ்வான தலைவர்
இருப்பினும் அவர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவராகவும், மிகவும் ஆக்டிவ்வான தலைவராகவும் உள்ளார். இதனால் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா தேர்தலில் களமிறங்கினால் அவரை எதிர்த்து ஜடேஜாவின் சகோதரி நயினா ஜடேஜா போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் எதிரும், புதிருமாக போட்டியிட்டால் குஜராத்தில் உள்ள பிரபல நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக ஜாம் நகர் வடக்கு தொகுதியும் மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜக சார்பிலும், அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சகோதரி நயினாவும் களமிறங்கினால் ரவீந்திர ஜடேஜா யாருக்கு ஆதரவாக இருப்பார்? குடும்பத்தினர் யார் பக்கம் இருப்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அவரிடம் அதை எதிர்பார்க்காதீர்கள்: ஹர்பஜன் சிங்
வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு: 14 மாவட்டங்களில் மிக கன மழை!