ரிஸ்க் தொகுதிகள்- ரிஸ்க் மாநிலம்: பாஜகவின் பக்கா பிளான்!

அரசியல்

பாஜக தேசிய தலைவர் நட்டா நேற்று (டிசம்பர் 27)  தமிழகத்தில் கோவை, ஈரோடு தொகுதியில் இருந்து தனது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கியிருக்கிறார்.

வெற்றி வாய்ப்புள்ள மாநிலங்களில் பிரச்சாரத்தைத் துவக்காமல் பெரிய அளவில் வாய்ப்பில்லாத மாநிலமான தமிழகத்தில் நட்டா பிரச்சாரத்தைத் தொடங்கி இருப்பதற்குப் பின்னால் பாஜகவின் வித்தியாசமான ஒரு தேர்தல் உத்தி இருக்கிறது என்கிறார்கள் பாஜக உள் வட்டாரத்தினர்.

அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு ஆளும் பாஜக தயாராகிவிட்டது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 303 இடங்களில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையை தனியாகவே அடைந்தது பாஜக.

நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பிரதமர் ஆனார். அடுத்து வரும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக தனியாகவே பெரும் வெற்றிகளை அடையும் வகையில் பாஜக பல்வேறு கட்ட வியூகங்களை வகுத்து வருகிறது.

அதில் ஒன்றுதான், ‘ரிஸ்க்கான தொகுதிகளைக் கண்டறிவது’.

அதாவது கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது அல்லது ஜெயித்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்த மக்களவைத் தொகுதிகளை வரும் தேர்தலில் கைப்பற்றியே தீருவது என்பதுதான் இந்த உத்தியின் அடிப்படை நோக்கம்.

வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள தொகுதிகளைக் கண்டறிந்து அங்கே பணிகளை அதிகப்படுத்துவது ஒரு வகை உத்தி என்றால்… எங்கே நாம் தோற்போம் என்று கருதுகிறோமோ அங்கே தீவிர கவனம் செலுத்தி அந்தத் தொகுதிகளில் இந்த முறை வெற்றிபெறுவதுதான், ‘கடின தொகுதிகளை கண்டுபிடிக்கும்’ வியூகம்.

பாஜகவின் தேசிய   இணை பொதுச் செயலாளர் (அமைப்பு) சிவபிரகாஷ், பொதுச் செயலாளர் சுனில் பன்சால் மற்றும் அந்தந்த மாநில பொறுப்பாளர்கள் இந்த குழுவில் இருக்கிறார்கள்.

இந்த குழுவின் செயல்பாடுகளை கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளரான பி.எல்.சந்தோஷ் மேற்பார்வையிட்டு அவ்வப்போது அறிவுரை வழங்குவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் 21, 22 தேதிகளில் கடினமான தொகுதிகளைக் கண்டறிந்து அதற்கான வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் கமிட்டி பிகார் தலைநகர் பாட்னாவில் கூடியது. ஏனென்றால் இந்த பட்டியலில் அதிக எண்ணிக்கையில் ரிஸ்க் தொகுதிகளை பிகாரில் இருந்துதான் பாஜக எதிர்பார்க்கிறது.

Risk Constituencies Risk State

2019 மக்களவைத் தேர்தலில், பிகாரில் பாஜக மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்  தலா 17 இடங்களில் போட்டியிட்டன. பாஜக அனைத்திலும் வெற்றி பெற்றிருந்தாலும், ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ஜேடி(யு) வெற்றி பெற்றது. மீதமுள்ள ஆறு இடங்களை ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான மற்றொரு பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி வென்றது.

வரும் மக்களவைத் தேர்தலில்  நிதிஷ்குமாரும்  லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாத்வ்வும் கூட்டணி சேர்ந்திருப்பதால் பிகாரில் வெற்றி வாய்ப்பு கடினமான தொகுதிகள் அதிகரிக்கும் என்று கணக்கிடுகிறது பாஜக. ஏற்கனவே பிகாரில் பலவீனமான தொகுதிகளான நான்கை வகைப்படுத்தியிருந்த பாஜக, இப்போது  பத்து தொகுதிகளில் பலவீனமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.

அதற்கேற்ப அங்கே இருக்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமித்து கட்சியின் பணிகள், மத்திய அரசின் பணிகள் ஆகியவற்றை அந்தத் தொகுதிகளில் அதிகப்படுத்துவது பற்றி பாட்னாவில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.  

மகாராஷ்டிராவில் சமீபத்தில் சிவசேனா உடைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓர் அணி பிரிந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் பட்னவிஸ் துணை முதல்வராகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் எந்தெந்த மக்களவைத் தொகுதிகள் பாஜகவுக்கு பலவீனமானவையாக இருக்கும் என்று  ஆய்வு நடத்தப்பட்டது.

பிகார் தலைநகர் பாட்னாவில்  டிசம்பர் 21 இல் நடந்த ஆய்வுக் கூட்டத்தில்   பிகார், மகாராஷ்டிரம்,   உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா, திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள  பாஜகவுக்கான பலவீனமான கடினமான தொகுதிகள் கணக்கெடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்குப் பின் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போதே  பாஜகவின் பார்லிமென்ட் போர்டு  கூடியது. அந்த கூட்டத்தில்  பாஜகவுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடினமான தொகுதிகளாக 144 என்ற எண்ணிக்கை 160 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

அதாவது 160 தொகுதிகள் பாஜகவுக்கு சவாலான தொகுதிகளாக இருக்கும். அவற்றில் தீவிர கவனம் செலுத்தி அந்தத் தொகுதிகளை வெற்றிபெற முயற்சிக்க வேண்டும் என்பதுதான் இதற்கான முதல் ஆய்வுக் கூட்டம் பிகார் பாட்னாவில் நடைபெற்றது என்றால், அடுத்த கூட்டம் டிசம்பர் 28,29 தேதிகளில் ஹைதராபாத்தில் நடக்கிறது.

மேற்கு வங்கத்தில் 24, மகாராஷ்டிரா 11, பீகார் 10, உத்தரப் பிரதேசம் 10, அஸ்ஸாம் 5, தெலுங்கானா 5 மற்றும் பஞ்சாப்பில் 3, தற்போது வரலாற்று வெற்றி பெற்ற குஜராத்தில் கூட ஒரு தொகுதியை கடினமான தொகுதியாக நிர்ணயித்துள்ளது பாஜக.

இந்தத் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக சிறப்பு செயல் திட்டங்களை தீட்டி இந்த தொகுதிகளுக்கு மத்திய அமைச்சர்களை அதிகம் அனுப்பி அந்தந்த மாநில அரசியல் சூழல்களுக்கேற்ப முடிவெடுத்து  கடினமான இந்த தொகுதிகளை பாஜகவுக்கு சாதகமாக மாற்றுவதற்காக பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் இந்த கடினமான தொகுதிகள் கொண்ட பட்டியலில் தமிழ்நாடு இல்லை. இதுபற்றி பாஜக உயர் வட்டாரங்களில் விசாரித்தபோது, “இந்த 160  என்பது இந்தியா முழுதும் உள்ள கடினமான தொகுதிகளின் எண்ணிக்கை.

ஆனால் தமிழ்நாடு என்ற மாநிலமே பாஜகவுக்கு கடினமாகத்தான் இருக்கிறது. அதற்காகத்தான் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் கூட்டத்தையே தமிழ்நாட்டில் துவக்கியுள்ளார் ஜெ.பி. நட்டா. எங்கள் கோட்டையில் வெற்றிபெறுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. எங்கே வெற்றி கிடைக்காது என்று சொல்லப்படுகிறதோ அங்கே வெற்றிபெறுவதுதான் எங்கள் இலக்கு.

அந்த வகையில்தான் தமிழ்நாட்டை குறி வைத்திருக்கிறோம். விரைவில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிரடியான நடவடிக்கைகள் இருக்கும். மக்களின் கவனம் பாஜகவை நோக்கித் திரும்பும்”  என்கிறார்கள்.

கடினமான தொகுதிகளை பட்டியல் எடுத்து சிறப்பு கவனம் காட்டும் பாஜக, கடினமான மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டுக்கு என்ன சிறப்பு செயல் திட்டங்கள் வைத்திருக்கிறது, அவை பலன் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-ஆரா

பொங்கல் தொகுப்பில் கரும்பு : அதிமுக ஆர்ப்பாட்டம்!

சீனாவிலிருந்து மதுரை வந்தவர்களுக்கு பிஎப்7 பாதிப்பா?

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *