பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸின் சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
கடந்த மே மாதம் தி சண்டே டைம் இதழ் வெளியிட்ட இங்கிலாந்து பணக்காரர்களின் பட்டியலில், 250 பேர் இடம் பிடித்திருந்தனர். இதில் ரிஷிசுனக்-அக்ஷதா மூர்த்தி தம்பதியினர் 730 மில்லியன் யூரோ, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களுடன் 222-வது இடத்தை பிடித்திருந்தனர்.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரின் தனிப்பட்ட சொத்து மதிப்பை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். மன்னரின் சொத்து மதிப்பே இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 850 கோடிகள் தான் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரிஷி சுனக், வெற்றிகரமான ஒரு வாழ்க்கையை தான் நடத்திக் கொண்டிருந்தார். உலகின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணி, ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனங்களில் பணி என கடுமையாக உழைத்த ரிஷி சுனக், தனது 20-வயதுகளிலேயே மில்லியனராக வளர்ந்திருந்தார்.
இதோடு இன்ஃபோஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளை திருமணம் செய்து கொண்டதன் மூலம் அவரது சொத்து மதிப்பு மேலும் உயர்ந்தது.
ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் 0.91 சதவீத பங்குகளை தன்னிடத்தில் வைத்திருக்கிறார். இதன் மூலம் ஆண்டுக்கு 11.5 மில்லியன் பவுண்டுகள் அவருக்கு லாபம் வருகிறது. அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு மட்டுமே இந்திய மதிப்பில் 3,500 கோடி ரூபாய் வரை உள்ளது. இது மறைந்த ராணி எலிசபெத்தை விட பெரிய பணக்காரர் என அக்ஷதா மூர்த்திக்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது.
ரிஷி சுனக்-அக்ஷதா மூர்த்தி தம்பதிக்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 2 வீடுகள், யார்க்ஷயர் மற்றும் அமெரிக்காவில் தலா ஒரு வீடு என நான்கு வீடுகள் உள்ளன.
மேற்கு லண்டனில் கென்ஸிங்டன் மாவட்டத்தில் இவர்களுக்குச் சொந்தமாக 4 மாடி வீடு ஒன்று உள்ளது. தனி தோட்டத்துடன் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய்.
இந்த வீட்டில் தான் ரிஷி சுனக்கின் குடும்பத்தினர் வார நாட்களில் தங்கி வருகின்றனர். இதே போல லண்டனின் பழைய பிராம்ப்டன் சாலையில் உள்ள வீட்டை உறவினர்களும் குடும்பத்தினரும் வந்தால் தங்குவதற்காக பயன்படுத்தி வருகின்றனர்..
இது மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் நார்த் யார்க்ஷயரில் இருக்கக் கூடிய மற்றொரு பசுமையான வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிடுவது வழக்கம். 2015-க்கு முன்பு 12 கோடி ரூபாய்க்கு வாங்கிய இந்த வீட்டின் மதிப்பு, தற்போது 14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த வீட்டில் 4 லட்சம் யூரோக்கள் மதிப்பிலான நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், யோகா செய்வதற்கான ஸ்டூடியோ, டென்னிஸ் கோர்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பே வாட்ச் திரைப்படம் படமாக்கப்பட்ட கடற்கரையைப் பார்த்தவாறு ஒரு வீடும் இந்த தம்பதிக்கு உள்ளது. சாண்டா மோனிக்கா மலையை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் 45 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் அது அரசியல் அரங்கில் ரிஷி சுனக்கிற்கு எதிராகவே முடிந்துள்ளது. கோடிகளில் புரளும் அவரால் சாமானிய மக்களின் பிரச்சனைகளை உணர முடியாது என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான வாதமாக உள்ளது.
இது மட்டும் அல்லாமல் இங்கிலாந்து விதிகளை பயன்படுத்தி ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி தனது வருமானத்திற்கு இங்கிலாந்தில் வரி கட்டுவதிலிருந்து விலக்கு பெற்றுள்ளதை எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் அம்பலப்படுத்தியதும் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
தனது சொத்து மதிப்பு குறித்த கேள்விகளை எதிர்கொள்ள தான் தயங்குவதில்லை என கூறியுள்ள ரிஷி சுனக், இது குறித்து கேள்வி எழுப்புபவர்களை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், தனது சொத்து மதிப்பையோ அல்லது எங்கெங்கு முதலீடு செய்திருக்கிறார் என்பதையோ அவர் ஒரு போதும் வெளியிட்டது இல்லை.
அப்துல் ராஃபிக்
இந்தியா முழுவதும் வாட்ஸப் சேவை முடக்கம்!